top of page

ஞாயிறு, டிசம்பர் 15 || தெளிதேன் துளிகள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Dec 15, 2024
  • 1 min read

விடாப்பிடியான ஜெபம் எழுப்புதலைக் கொண்டுவரும்!


அங்கே இவர்களெல்லாரும் ... ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

- அப்போஸ்தலர் 1:14


சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு கிராமப்புற சபையில் கர்த்தர் கொண்டுவந்த எழுப்புதலால் ஊரிலிருந்த மதுபானக் கடைகளும், திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன. இளைஞர்களும் பெரியவர்களும் கூட்டம் கூட்டமாக தங்களை ஒப்புக்கொடுத்தனர்; பாவ வழிகளைவிட்டுத் திரும்பினர். இது எப்படி சாத்தியமாயிற்று என்று அந்த சபை விசுவாசிகளிடம் கேட்கப்பட்டது. அவர்கள் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சபை ஆராதனைக்கு மக்கள் வருவது குறைந்துகொண்டே போனது; சபையை மூடிவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டோம். அப்போது எங்கள் ஊருக்கு ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி வந்தார்கள். அவர்களது விசுவாசம் அளவுக்கு மிஞ்சியதாயிருந்தது. சபையில் காலியாயிருந்த நாற்காலிகளைக் கண்ட அவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். கர்த்தர் இந்த சபையை ஆத்துமாக்களால் நிரப்ப விரும்புகிறார்; ஆண்களும் பெண்களும் சத்துருவின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவும் விரும்புகிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்காக நாம் அவரது பாதத்தில் விழுந்து கெஞ்சி ஜெபிக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். எனவே இன்றிலிருந்து நாம் கூடி விசுவாசித்து ஜெபிப்போம் என்று கூறினார்கள். சொன்னது மட்டுமல்ல! எங்களை ஊக்கப்படுத்தி தினமும் கண்ணீருடன் ஜெபிக்கும்படி செய்தார்கள். ஒவ்வொரு நாளும் கூடி ஜெபித்தோம். ஜெபவேளையில் மற்ற பேச்சு தடைசெய்யப்பட்டது. அந்தரங்கத்தில் எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களோடு பலர் சேர்ந்து ஜெபித்தனர். இதன் விளைவாக, ஞாயிறுப் பள்ளியில் பிள்ளைகள் அதிகமானார்கள்.  தொலைந்துபோன ஆத்துமாக்கள்மேல் எங்களுக்கு அதிக பாரம் உண்டாயிற்று. இருபத்து நான்கு மணிநேரமும் யாராவது சபையில் ஜெபித்துக்கொண்டிருக்கும் நிலை வந்தது. இதுவே நீங்கள் பார்க்கும் இந்த எழுப்புதலுக்குக் காரணம் என்று கூறினார்கள்.


அன்பு நண்பர்களே, உண்மையாகவே கர்த்தர் மாத்திரமே நமது ஊரில் ஒரு எழுப்புதலைக் கொணரமுடியும். அதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆத்தும பாரத்துடன் கண்ணீர் சிந்தி ஜெபிப்பதுதான். செய்வோமா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எனக்குள்ளாக, என் சபை மக்களுக்குள்ளாக ஒரு விண்ணப்பத்தின் ஆவியை, கண்ணீரின் ஆவியை நீர் ஊற்றவேண்டுமென ஜெபிக்கிறேன். எங்கள் பகுதிகளில் ஒரு மாபெரும் எழுப்புதலை நீர் கொண்டுவர அனுதினமும் ஜெபிக்கும் கிருபையை எங்களுக்குத் தாரும். ஆமென். 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page