ஞாயிறு, ஜனவரி 12 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul

- Jan 12
- 1 min read
வாசிக்க: லூக்கா 16: 19-31
ஐசுவரியவானும் லாசருவும்!
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? - மத்தேயு 16:26
இந்த உவமையில் நாம் படிக்கும் ஐசுவரியவானும் மரித்தான்; லாசருவும் மரித்தான். மரித்த இந்த ஐசுவரியவான் பாதாளத்திற்குச் சென்றான். அங்கிருந்து முதலில் தனக்காகவும், பிறகு தன் சகோதரர்களுக்காகவும் ஜெபித்தான். அவன் யாரிடம் ஜெபித்தான் என்பது வேடிக்கையாக உள்ளது. தேவனிடத்திலல்ல, ஆபிரகாமிடம் ஜெபித்தான். முதலாவது, தனக்கு அவன் ஆறுதலைத் தேடி, லாசருவின் மூலம் கொஞ்சம் தண்ணீரை அனுப்பித்தரும்படி வேண்டினான். பூமியில் சம்பிரமமாய் வாழ்ந்தபோது அவனுக்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்க அடிமைகள் இருந்தனர். இப்போதோ, உதவியற்ற பரிதாபமான நிலை! ஆபிரகாம், அவனது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமைக்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறான். முதலாவது, பூமியில் ஐசுவரியவான் தனக்குண்டான எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவித்துவிட்டபடியால் இப்போது அவன் எதையும் கேட்பது நியாயமில்லை. அடுத்ததாக, லாசரு தன்னிடத்தைவிட்டு சிறிது நேரம் அவனிடத்திற்கு வருவதற்கும் பெரிய தடையாக இருவருக்குமிடையே ஒரு பிளவு உண்டாயிருந்தது.
அன்பானவர்களே, இந்த உவமை நமக்கும் ஒரு எச்சரிப்பின் செய்தியைக் கொண்டுவரட்டும். இந்த ஐசுவரியவானது வாழ்நாட்களில், பலமுறை கர்த்தர் அவனுடன் பேசியிருப்பார். அவனை கர்த்தர் அதிகமாக ஆசீர்வதித்திருந்தும் அவன் அவரிடம் திரும்பாமல் போனான். அவனுக்கு நிச்சயம் நியாயப்பிரமாணத்தைப்பற்றிய அறிவு இருந்திருக்கும். ஆயினும், அவனது இருதயம் அவற்றை ஏற்றுக்கொள்ளவுமில்லை; அவற்றை அவன் கடைப்பிடிக்கவும் இல்லை. தன் வீட்டு வாசலிலேயே லாசருவின் மரணம் நிகழ்ந்தும் அவன் உணர்வடையவில்லை; தானும் ஒருநாள் மரிக்கவேண்டுமே என்ற எண்ணம் தோன்றவுமில்லை. அவனது இருதயம் கடினப்பட்டுக் கிடந்தது. நாம் அப்படியிருக்கக்கூடாது. இன்றே நாம் மனந்திரும்பவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். மனந்திரும்பவோ, மாறவோ மரித்தபிறகு நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படமாட்டாது.ஜெபம்: தகப்பனே, ஒருபோதும் செல்வத்தின்மேல் பற்றுவைக்காதபடி என்னைக் காரும். உமது வார்த்தைக்கு என் இருதயத்தை அடைத்துக்கொள்ளாமலிருக்க உமது கிருபையைத் தாரும். மனந்திரும்ப நீர் எனக்குக் கொடுக்கும் வாய்ப்பை நழுவவிடாமல் உடனே உம்மிடம் வர எனக்குத் தயவு பாராட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments