ஞாயிறு, ஜூலை 27 || மேட்டிமையான பார்வை! அகந்தையான உள்ளம்!!
- Honey Drops for Every Soul

- Jul 27
- 1 min read
வாசிக்க: பிலிப்பியர் 2:5-11
மேட்டிமையான பார்வையும். அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே. - நீதிமொழிகள் 21:4
நாம் தாழ்மையை அணிந்துகொண்டால் மட்டுமே எழுப்புதலையும் கர்த்தருடைய மகிமையையும் பார்க்கமுடியும். நாம் நம்மை வெறுமையாக்கும்போதுதான், இயேசு நம் வாழ்வில் ஆட்சி செய்யமுடியும். இந்தத் தாழ்மையின் விளைவுதான் என்ன?
முதலாவது, கர்த்தரைப்பற்றிய சரியான அறிவைப்பெற்றவர்களுக்கு மட்டுமே தாழ்மை இயல்பாக வரும். வாலிபர்களின் மத்தியில் ஊழியம் செய்யும் ஒருவர், கர்த்தருடைய மகிமையை நான் முழுமையாக உணரும்போதுதான் நான் தாழ்மையுள்ளவனாயிருக்கிறேன், சிறந்த பரிசுத்தவான்களே அதிகத் தாழ்மையுடையவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்.
இரண்டாவதாக, இயேசுவின் தலையாய குணம் தாழ்மையாகவே இருந்தது. அவர் தேவனுடைய குமாரனாயிருந்தும், மரணபரியந்தம், சிலுவையின் மரணபரியந்தமும் தன்னைத் தாழ்த்தினார்.
மூன்றாவதாக, விசுவாசிகள் கர்த்தருடைய வல்ல கரத்திற்குள் தங்களைத் தாழ்த்தும்போது சபை ஆவிக்குரிய வகையிலும், எண்ணிக்கையிலும் மிகப்பெரும் வளர்ச்சியைச் சந்திக்கிறது.
எழுப்புதல் வருவதற்கு 2 நாளாகமம் 7:14ல் கூறியிருக்கிறபடி, தாழ்மையே முதல் காரணம். இயேசுவின் நாட்களில், இயேசுவிடம் வெளிப்புறத் தாழ்மையை வெளிப்படுத்திய மதத் தலைவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களை இயேசு கடிந்துகொண்டதையும் நாம் அறிந்திருக்கிறோம். எனவே, உள்ளான தாழ்மையையே கர்த்தர் விரும்புகிறார் என்பதுதான் உண்மை.
அன்பானவர்களே, தாழ்மையாய் நாம் நடந்தால் உலகம் நம்மை ஏளனமாகப் பேசலாம். இது என்ன பயித்தியக்காரத்தனம் என கேலி செய்யலாம். ஆனாலும்கூட கர்த்தருடைய பிள்ளைகளாக நாம் இந்தத் தாழ்மையைத் தரித்துக்கொண்டு கர்த்தரை உயர்த்தவேண்டும். உயர்த்துவோமா?ஜெபம்: தேவனே, எழுப்புதல் காண நான் தரவேண்டிய விலை என் பெருமையை நொறுக்கிப்போட்டு தாழ்மையைத் தரித்துக்கொள்வதே என உணர்த்தப்பட்டேன். சீஷர்களின் கால்களைக்கழுவிய இயேசுவை நான் தாழ்மைக்கு மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு எழுப்புதலுக்கு வழிவகுக்க உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments