ஞாயிறு, ஜூலை 13 || ஆண்டவரே, மாய்மாலத்திற்கு என்னை விலக்கியருளும்!
- Honey Drops for Every Soul

- Jul 13
- 1 min read
ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
- எபிரெயர் 10:31
மாய்மாலம் என்பது முகமூடி அணிந்து நடிப்பது போன்றது. இதுவே அனனியா சப்பீராள் தம்பதியர் செய்த தவறு. தங்களுடைய சொந்தமான நிலத்தை விற்று, தன் மனைவியோடு இணைந்து ஆலோசித்து, ஒரு பங்கை வஞ்சித்துவைத்து மற்றதை சபைக்குக் கொண்டுவந்து அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்து, தன்னுடைய எல்லா பணத்தையும் வைத்ததுபோல பாசாங்கு செய்தான் அனனியா. ஆனால் ஆவியானவர் அதை பேதுருவிற்கு வெளிப்படுத்தினார்; பேதுரு அவனைக் கடிந்துகொண்டபோது அனனியா விழுந்து மடிந்தான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குமுன்பாக, மூன்று மணி நேரம் கழித்து சபைக்கு வந்த சப்பீராளையும் பேதுரு கடிந்துகொண்டபோது, அவளும் ஜீவனை விட்டாள். அப்போதுதான் அந்த இருவரும் தாங்கள் விற்ற பணத்தைக்குறித்து பொய் சொன்னார்கள் என்பதை சபை விசுவாசிகள் புரிந்துகொண்டனர். தேவனை இவ்வளவு கோபமடையச் செய்த அவர்களின் பாவம்தான் என்ன? அவர்கள் ஒரு பங்கை வஞ்சித்துவைத்ததைக் காட்டிலும், தேவனை மகிமைப்படுத்தாமல் அவரிடம் பொய் சொன்னதே அவர்கள் செய்த பெரிய பாவமாக இருந்தது. பர்னபா தன் நிலத்தை விற்று கிரயப்பணத்தை அப்போஸ்தலருடைய பாதபடியில் வைத்தபோது அவனுக்குக் கிடைத்த பாராட்டைக் கண்ணுற்ற இந்த இருவரும், தங்களுக்கும் அந்தப் புகழ் கிடைக்க விரும்பி, மக்களின் கண்களுக்கு முன்பாக அப்படிச் செய்தார்கள்.
அன்பு நண்பர்களே, இன்று அவர்களைக் குறைசொல்வது நமக்கு எளிது. ஆனால் நாம் எப்படியிருக்கிறோம் என்பதை சற்று நிதானித்து அறிவோம். மாய்மாலக்காரராக நாம் இருந்தால் கர்த்தருடைய கோபத்துக்கு ஆளாகிவிடுவோம். ஜாக்கிரதையாக இருப்போம்! ஜெபம்: பிதாவே, மற்றவர்களுக்கு பரிசுத்தவானைப்போல நடித்து, உள்ளத்தில் வஞ்சனை கொண்டிருந்திருக்கிறேன். என் ஜெபம், என் தசம பாகம் இவற்றில் உம்மை வஞ்சித்திருக்கிறேன். ஆயினும், உமது கிருபை என்னைத் தப்புவித்தது. இனிமேல் மாய்மாலமின்றி செம்மையாய் நடக்க உமது கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments