ஞாயிறு, ஜூலை 06 || கிறிஸ்துவற்ற வாழ்க்கை நம்பிக்கையற்று முடியும்
- Honey Drops for Every Soul

- Jul 6
- 1 min read
வாசிக்க: 1 பேதுரு 1: 1-6
அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ... ஜீவனுள்ள ... இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். - 1 பேதுரு 1:4
நம்பிக்கை வார்த்தைகள் ஊக்குவிக்கும்போது மோசமான துயர நிலையிலிருந்து ஜனங்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஜீவனோடு வேறு எதுவும் வைக்கமுடியாதபோது, நம்பிக்கையின் வல்லமைதான் ஒருவரை ஜீவிக்கச் செய்கிறது. நம்பிக்கை நம் அனைவருக்கும் நிச்சயம் தேவை. உலகம் தருகின்ற பொய்யான ஏமாற்றும் வெற்று நம்பிக்கைக்கு மாறாக, ஜீவனுள்ள நம்பிக்கை உறுதியும் உண்மையும் நிச்சயமுமாயிருக்கிறது. இந்த நாட்களில் அநேகர் பங்குச் சந்தையில் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள். சிலர் தங்கள் உடல்நலத்திலும், குடும்பத்திலும் நம்பிக்கை வைக்கிறார்கள். இது அவர்களுடைய விருப்பத்தின் பேரில் வந்த நம்பிக்கை; கிறிஸ்தவ நம்பிக்கையோ இயேசுகிறிஸ்துனுடைய மீட்பின் பணியை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை.
புதிய ஏற்பாட்டில் நம்பிக்கை என்ற வார்த்தை, அன்பான விருப்பத்தையோ அல்லது ஆசையையோ குறிக்கவில்லை. அது தேவ வார்த்தையை மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட உறுதியான நம்பிக்கையையே குறிக்கிறது. அழியாத இந்த நம்பிக்கைதான் ஜீவனுள்ள நம்பிக்கை. மற்ற நம்பிக்கையெல்லாம் உதிர்ந்த மலர்களைப்போல வாடிப்போய்விடும். ஐசுவரியவான்களின், பெருமைக்காரர்களின் நம்பிக்கை அனைத்தும் விட்டு விட்டு எரியும் திரியைப்போல விரைவில் அணைந்துவிடும்; ஆனால் வேதாகமம் சொல்லும் நம்பிக்கை ஜீவனும் உறுதியுமாயிருக்கும். கிறிஸ்துவின்றி வாழ்வது நம்பிக்கையற்ற முடிவு, கிறிஸ்துவுக்குள் வாழ்வது முடிவற்ற நம்பிக்கை என்றார் ஒருவர். நம்பிக்கைக்கு எதிர்ப்பதம் விரக்தி - கிறிஸ்துவை இரட்சகராய் ஏற்றுக்கொள்ளாத விசுவாசமற்றவர்களுக்கு உண்டாகும் நம்பிக்கையற்ற நிலை! அன்பானவர்களே, கலவரமும் ஆபத்தும் நிறைந்த இன்றைய உலகிலே, நம்பிக்கையே நமது ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. (எபிரெயர் 6:19-20) நம் உள்ளத்தை எத்தகைய உபத்திரவமோ, சோதனைகளோ தாக்கினாலும், தேவ வார்த்தை ஒருபோதும் தோல்வியடையாது என்கின்ற அசையாத நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம்.ஜெபம்: ஆண்டவரே, இவ்வுலகம் தருகின்ற நம்பிக்கை வேரற்று வாடிவிடும், ஆனால் விசுவாசியின் நம்பிக்கையோ உம்மிலும் உம் ஜீவ வார்த்தையிலும் வேரூன்றியிருப்பதால் இன்னும் சிறந்து பிரகாசமாகும். மோசம் வருமோவென நான் அஞ்சும்போது, கட்டுப்பாடு உம்மிடத்தில்தான் இருக்கிறது என்று நம்பிக்கை சொல்லும். அந்த ஜீவனுள்ள நம்பிக்கைக்காக நன்றி செலுத்துகிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments