ஞாயிறு, ஜூன் 29 || பெருமைக்குப் பலியாகவேண்டாம்!
- Honey Drops for Every Soul

- Jun 29
- 1 min read
வாசிக்க: தானியேல் 2:29-35,45
மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
- நீதிமொழிகள் 16:5
தானியேலின் புத்தகத்தில், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வாழ்வில் நடைபெற்ற ஒரு பிரமிக்கவைக்கும் சம்பவத்தை வாசிக்கிறோம். அவனது இரண்டாவது வருட அரசாட்சியின்போது, நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான். அதில் ஒரு பெரிய பிரகாசமுள்ள சிலையை அவன் கண்டான்; பார்த்துக்கொண்டிருக்கும்போதே கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் உருண்டுவந்து அதன் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது. அந்தக் கல்லோவென்றால் பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பியது. உடனே ராஜா, தன் தேசத்திலுள்ள ஞானிகளை அழைத்து கனவையும் அதன் அர்த்தத்தையும் கூறும்படி கட்டளையிட்டான். அவர்களால் முடியாமல் போயிற்று. இறுதியாக, தானியேல் கர்த்தரின் வல்லமையைப் பெற்று சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் ராஜாவுக்கு வெளிப்படுத்தினான். பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார் என்று நேபுகாத்நேச்சாரின் ஆளுகை கர்த்தரிடமிருந்து கொடுக்கப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தினான். ராஜா அசந்துபோனான். ஆனாலும் சில நாட்கள் சென்றபிறகு, ஒரு நாள் உப்பரிகையில் உலாவினபோது பாபிலோன் நகரத்தைக் கண்ணுற்ற ராஜா, இருதயத்தில் பெருமைகொண்டு இது என்னுடைய மகிமைப் பிரதாபத்துக்கென்று நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று மனதில் நினைத்தான். தன் வெற்றிக்கெல்லாம் காரணம் கர்த்தராகிய தேவனே என்று அவரை மகிமைப்படுத்தாமல் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டான். அதன் விளைவாக தன் ராஜ்யபாரத்திலிருந்து தள்ளப்பட்டு வெளியின் பனியில் நனைந்து மிருகத்தைப்போல ஆக்கப்பட்டான்.
அன்பானவர்களே, ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கும்போது நாம் அவருக்குரிய கனத்தையும் மகிமையையும் புகழையும் அவருக்குச் செலுத்த மறக்கக்கூடாது. அதோடு மனமேட்டிமைக்கு சற்றேனும் இடம் தந்துவிடக்கூடாது. ஜெபம்: தகப்பனே, நீர் என்னை ஆசீர்வதிக்கையில் நான் பெருமைக்கு இடம் தராமல், நீரே என்னை ஆசீர்வதிக்கிற கர்த்தர் என்று உம்மைக் கனப்படுத்த கிருபை தாரும். நீரே கர்த்தராகிய ஆண்டவர். எவரையும் உயர்த்தவும் தாழ்த்தவும் உம்மால் ஆகும். உமக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments