ஞாயிறு, ஜூன் 22 || கண்களின் இச்சைக்கு குருடரைப்போல் இருங்கள்!
- Honey Drops for Every Soul

- Jun 22
- 1 min read
வாசிக்க: நீதிமொழிகள் 5: 1-14
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? - யோபு 31:1
பெலிஸ்தியரின் கை ஓங்கியிருந்த நாட்களில் இருபது வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதி சிம்சோன். அவன் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவன். அவரது ஊழியத்தைச் செய்ய அழைப்பைப்பெற்றவன். ஆனாலும் தன் கண்களை தன்னிச்சையாக அலையவிட்டதினால், பெற்றோருக்கும் கர்த்தருக்கும் இழுக்குண்டாக்கினான். முதலாவதாக, கர்த்தரது கட்டளைக்கெதிராக, ஒரு புறஜாதிப் பெண்ணை திம்னாத் ஊரில் கண்டு இச்சித்தான். அவள் அவனைக் கவர்ந்தாள், பிறகு அவனைத் தன் கட்டுக்குள் வைத்தாள்; கடைசியில் அவனை ஏமாற்றிவிட்டாள். இரண்டாவதாக, சிம்சோன் காசாவுக்குச் சென்றபோது அங்கே ஒரு வேசியினிடத்தில்போய் அவளோடு சிநேகமாக இருந்தான். (நியாயாதிபதிகள் 16:1) மறுபடியும் கண்களின் இச்சையும் மாம்சத்தின் இச்சையும் ஒருசேர அவனைப் பற்றிக்கொண்டன. ஒரு நசரேயனாக சிம்சோன் இருந்தும் அப்படிச் செய்தது கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பாயிருந்தது. இறுதியாக, எதிரியின் எல்லைகளிலிருந்த சோரேக் ஆற்றங்கரையில் வசித்த தெலீலாளுடன் சிநேகம் கொண்டான் சிம்சோன். அவள் அவனைக் கனவீனப்படுத்தி, கடைசியில் அவனது எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்துவிட்டாள். அவனது கண்களின் இச்சை அவனது அழிவுக்குக் காரணமானது.
அன்பு நண்பர்களே, தன் மாம்சத்துக்கு, சிம்சோன் என்று அடிபணிய ஆரம்பித்தானோ அன்றே சிம்சோனது அழிவு தொடங்கிவிட்டது. முதலாவது தன் பெற்றோரது அறிவுரையைத் தள்ளி பெலிஸ்தியப் பெண்ணை மணந்தான். வேசியினிடத்தில் பிரவேசித்து நசரேய விரதத்தை இழந்தான். இறுதியாக, கர்த்தரின் எச்சரிப்பையும் பொருட்படுத்தாமல், அவரது வார்த்தையை புறம்பே தள்ளியதால் தன் எதிரிகளிடத்தில் பிடிபட்டான். தன் கண்களைக் கட்டுப்படுத்தாமல் விட்டதால் சிம்சோன் தனது சாட்சியை, அழைப்பை, ஊழியத்தை இழந்ததோடு, வாழ்வையும் இழந்தான். நாம் எச்சரிப்புடனிருந்து, நம் கண்களைப் பரிசுத்தமாகக் காப்போம். கர்த்தரைக் கனப்படுத்துவோம். ஜெபம்: தேவனே, சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்த உலகில் நான் வாழ்வதால், ஒவ்வொரு நிமிடமும் அவனது வஞ்சகவலையில் விழும் அபாயத்தில் இருக்கிறேன். எனவே, உம் கிருபையுடன் என்னையும் என் கண்ணையும் காத்துக்கொண்டு, சோதனைக்குத் தப்ப உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments