ஞாயிறு, ஜூன் 08 || பணமா! பரமனா! இன்றே முடிவெடுங்கள்!!
- Honey Drops for Every Soul

- Jun 8
- 1 min read
வாசிக்க: 1 தீமோத்தேயு 6: 6-11
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், .. இச்சைகளிலும் விழுகிறார்கள். - 1 தீமோத்தேயு 6:9
பணம் நமது வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுக்கமுடியாது. நமது வாழ்வின் மற்ற பகுதிகளில் எவ்வளவுதான் ஆவிக்குரிய விதத்தில் நாம் வளர்ந்திருந்தாலும், பணவிஷயத்தில் நாம் கர்த்தரது ஆளுகைக்கும் சித்தத்திற்கும் உட்படாவிட்டால் அவரது மெய்யான ஆசீர்வாதங்களை நம்மால் பெறமுடியாது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று பவுல் 1 தீமோத்தேயு 6:10ல் கூறுகிறார். பொருளைக் குறித்த உங்கள் நிலைப்பாடு கர்த்தரைக்குறித்த உங்கள் நிலைப்பாட்டைப் பாதிக்கும் என்று டெரிக் பிரின்ஸ் கூறுகிறார். ஆண்டவராகிய இயேசுவும் தமது மலைப்பிரசங்கத்தில், இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது... தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது எனத் தெளிவாகக் குறியுள்ளார். (மத்தேயு 6:24) சில மொழிபெயர்ப்புகள் உலகப்பொருள் என்பதற்கு மேமன் (Mammon) என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றன. அந்த சொல் பொருளையல்ல, பொல்லாத வல்லமையைக் குறிக்கிறது. அது ஒரு மனிதனை பண ஆசைக்கு அடிமையாக்கிவிடுகிறது என்கிறார் டெரிக். நாம் அப்படி அடிமைப் பட்டவர்களாக அல்ல, ஆண்டவருக்கு நமது வாழ்வை அர்ப்பணித்து வாழும்போது, அந்தப் பொல்லாத வல்லமையை நாம் மேற்கொள்கிறாம். வேறுவகையில் சொன்னால், உலகப்பொருளை நாம் சிநேகித்தால், தேவனை நாம் வெறுக்கிறோம். தேவனுக்கு நம்மை அர்ப்பணித்தால் பிசாசை எதிர்க்கிறோம். இந்த விஷயத்தில் நாம் நடுநிலை வகிப்பது கூடாத காரியம். எனவே, நமது நிலைப்பாட்டை நாம் சரிசெய்துகொள்ளவேண்டும். தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் நாம் தேடினால் நமது பொருளாதாரத் தேவைகளை அவர் சந்திப்பார். (மத்தேயு 6:33)
அன்பானவர்களே, தேவனைவிட்டு பணத்தின் பின்னால் ஓடுவதைத் தவிர்ப்போம். உன் பொருளாலும், உன் விளைவின் எல்லா முதற்பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணு என்று நீதிமொழிகள் 3:9 கூறுகிறபடி அவர் கொடுத்த நம் ஐசுவரியத்தை அவரைக் கனப்படுத்துவதற்கே பயன்படுத்துவோம். ஜெபம்: தேவனே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் ஐசுவரியம் உமது சித்தப்படி பயன்படுத்தப்படுவதற்கு எனக்கு கிருபை தாரும். ஒருநாளும் பணத்தின்பின் நான் ஓடாதபடிக்கு என்னைத் தடுத்துப்போடும். உம்மை முதன்மைப்படுத்தி, உமக்கு ஊழியஞ்செய்ய எனனைப் பக்குவப்படுத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments