ஞாயிறு, ஜூன் 01 || தரித்து நில்! பொறுமையாய் இரு! தேவன் சீக்கிரம் கதவை திறப்பார்
- Honey Drops for Every Soul

- Jun 2
- 1 min read
வாசிக்க: யாத்திராகமம் 14: 1-14
பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; ... - யாத்திராகமம் 14:13
முன்னே சிவந்த சமுத்திரம், பின்னே பார்வோன் சேனை, இரண்டுக்கும் நடுவே இஸ்ரவேலர் சிக்கியபோது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டனர்; மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர். அவர்கள் விரக்தியும் பயமும் அடைந்தனர். மோசே அவர்களை உற்சாகப்படுத்தும்விதமாக, நின்றுகொண்டு கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் என்று கூறினான். மோசேயிடம் அனுகூல மனப்பான்மை இருந்தது! மிகவும் மோசமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு வழி தேவன் தரும் விடுதலையே என்பதை அவன் நன்றாய் அறிந்திருந்தான். முன்பு விரைவில் கோபமடையும் அவன், இன்று விரோதமும் கலககுணமும் உள்ள ஜனங்களிடம் அவசர நிலையைச் சந்திப்பதற்கான மூன்றுவித வழிகாட்டுதலைக் கூறினான். முதலாவது, பயப்படாதிருங்கள். இரண்டாவது, நின்றுகொண்டு இரட்சிப்பை (தேவன் தருகின்ற விடுதலையை) பாருங்கள், கர்த்தரே யுத்தம் செய்வார். மூன்றாவது, தரித்து நில்லுங்கள். (செயல்களை நிறுத்தி, சும்மா இருங்கள், கர்த்தரே உங்களுக்காக செயலாற்றுவார். )
அன்பானவர்களே, இஸ்ரவேல் ஜனங்களிடம் தரித்து நிற்கும்படி மோசே சொன்னான். இதுவேதான் நெருக்கடியான நேரங்களில் விசுவாசிகளுக்குத் தேவன் கூறும் வழிகாட்டுதல்! விரக்தி நம்மை நிற்கவிடாமல் கீழே தள்ளிவிடும். பயம் நம்மைப் பின்னிடச் செய்யும். பொறுமையின்மை உடனே எதையாவது செய்யத் தூண்டும். அனுமானம் செங்கடல் பிரிவதற்கு முன்பே முன்னேறச் சொல்லும். ஆனால், தேவனோ இஸ்ரவேலருக்குச் சொன்னதுபோல, தமது செயல்திட்டத்தை வெளிப்படுத்தும் வரையில் அமைதியுடன் சும்மாயிருக்கச் சொல்வார். எனவே, நாம் அனுமானம், விரக்தி, பயம், பொறுமையின்மைக்கு செவி கொடாமல், விசுவாசத்துக்குச் செவிகொடுப்போம்; அப்போது தரித்து நில் என்ற தேவ சத்தத்துக்கு நம் செவிகள் திறக்கப்படும். உறுதியுடன் அசையாமல் நாம் நிற்போம். உற்சாகமாய், பொறுமையுடன் தேவனுக்காகக் காத்திருப்போம்; இனிவரும் அவரது கட்டளைகளை நிறைவேற்றத் தயாராயிருப்போம். மோசே இஸ்ரவேலரிடம் புறப்பட்டுப் போங்கள் என்று சொன்னதுபோல தேவனும் நம்மிடம் விரைவில் சொல்லுவார்!
ஜெபம்: ஆண்டவரே, முன்னேயும் போகமுடியாது, பின்னேயும் செல்லமுடியாது நான் நிற்கும்போது, விரக்தி, பயம், பொறுமையின்மைக்கு இடம் தரமாட்டேன். அவசரமாய் செயல்படாது, தரித்து நில் என்ற விசுவாச வார்த்தைக்கு நான் செவிகொடுப்பேன். தேவன் எனக்காக செயல்படுவார்; விசுவாசத்தில் உறுதியாய் நிற்கும்படி என்னைப் பெலப்படுத்துவார். ஆமென். தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments