ஞாயிறு, செப்டம்பர் 14 || உண்மையான சீடத்துவம்
- Honey Drops for Every Soul
- Sep 14
- 2 min read
வாசிக்க: லூக்கா 9:23-27
ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். - லூக்கா 9:23
சீஷத்துவம் என்பது தலைப்பு மட்டும் அல்ல. அதைவிட மேலானது. அது எஜமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வது. நம் சொந்தத் திட்டத்தை புறம்பே தள்ளி, தேவனது சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அது. அது இலேசானது அல்ல. அதன் பாதை நம்மைப் பாடுகள், அசௌகரியங்கள், புறக்கணிப்புக்கு ஊடாக நடத்திச் செல்லும். ஆனால், அதுதான் ஜீவனுக்கு நடத்தும் ஒரே பாதை. தூரத்தில் நின்றுகொண்டு அவரைப் போற்றும்படி நம்மை இயேசு அழைக்கவில்லை. சிலுவை சுமக்கவும், தியாகம் செய்யவும், வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் அவரை நம்பி எடுத்து வைக்கவும், அவரை நெருக்கமாகப் பின்பற்றவுமே அவர் அழைக்கிறார். யோவான் 8:31ல், இயேசு இதையே நமக்கு நினைவூட்டுகிறார் - நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ், பரிசுத்தமாக்கப்படுதலின் விலைக்கிரயம் பாவத்தை விட்டுவிடுவது மட்டுமல்ல, நம்மை முழுவதுமாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தலே என்கிறார். இதுதான் உண்மையான சீஷத்துவத்தின் கருப்பொருள். அது எப்போதாவது செய்யும் பக்தியான செயல்களை அல்ல; முழு விசுவாசத்தை வெளிப்படுத்தும் வாழ்க்கை முறையையே அது வேண்டுகிறது. சுவிஷேசங்களை நாம் வாசிக்கும்போது, சீஷத்துவத்துக்கு இயேசு கொடுத்த அழைப்பு உறுதியான, சமரசத்துக்கு இணங்காத ஒன்றாக இருக்கிறது என்பதை அறிவோம். அவர் பெருங்கூட்டத்தை அல்ல, தன்னைத் தான் வெறுத்து தேவராஜ்யத்துக்காக வாழத் தயாராக தங்களை அர்ப்பணித்து, தம்மை பின்தொடரும் மக்களையே நாடினார்.
அன்பானவர்களே, சாதாரண விசுவாசி என்ற நிலையிலிருந்து, அர்ப்பணித்து பின்தொடருபவன் என்ற நிலைக்கு மாற்றும் ஒரு அடியை இன்று எடுத்து வையுங்கள். உங்கள் நடை உங்கள் வார்த்தைக்கு ஒத்து இருக்கட்டும். உங்கள் வாழ்க்கை, நீங்கள் பின்பற்றுகிறவரைப் பிரதிபலிக்கட்டும். உண்மையான சீஷத்துவத்துக்கு அதிக விலைக்கிரயம் தேவை. ஆனால், அது நாம் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு பலன்களைத் தரும். நம் உத்தமத்தை உலகம் பாராட்டாது. ஆனால், பரலோகம் நம்மைக் கவனிக்கும். முடிவிலே நம் எஜமானரின் புன்னகை மனிதர்களின் அங்கீகாரத்தைவிட பன்மடங்கு விலையேறப்பெற்றது. நாம் வெறும் வார்த்தையில் மட்டும் சீஷர்களா அல்லது நமது செய்கையிலும் சீஷர்களா என்று நம்மை நாமே உண்மையாய்க் கேட்டுக்கொள்வோம்.
ஜெபம்: அன்புள்ள இயேசு தேவா, உம்மை தூரத்திலிருந்து பின்பற்ற அல்ல, முழு அர்ப்பணிப்புடன் உம்மைப் பின்பற்றவே என்னை நீர் அழைத்திருக்கிறீர். கடினமாக இருந்தாலும், அனுதினமும் என் சுயத்தை வெறுத்து, கீழ்ப்படிதலுடன் நடக்க எனக்கு உதவும். உமது வாழ்க்கையையும் அன்பையும் பிரதிபலிக்கும் உண்மை சீஷனாக என்னை உருவாக்கும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments