ஞாயிறு, ஏப்ரல் 27 || பிரம்பைக் கையாட வேண்டுமா என்ன?
- Honey Drops for Every Soul

- Apr 27
- 1 min read
வாசிக்க: நீதிமொழிகள் 23: 12-19
பிரம்பைக் கையாடாதவன் .. மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். - நீதிமொழிகள் 13:24
இன்றைய வேதப்பகுதியில் சாலொமோன் ஞானி, பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் சரியான நோக்கத்தோடு, தகுந்த விதத்தில், கண்டித்து வளர்த்தால்தான் அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறார். நல்ல கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வேதநெறியைவிட்டு விலகிநடக்கும்போது அவர்களை அன்புடன் கண்டித்து நடத்தினால் மட்டுமே அந்தப் பிள்ளைகள் நரகத்திலிருந்து தப்பித்து மரண ஆக்கினைக்கு நீங்கலாக உதவி செய்பவர்களாயிருப்பார்கள். அப்படிச் செய்யாத பட்சத்தில் எப்படி கடிவாளமிடப்படாத குதிரை தறிகெட்டு தனக்கே கேடுண்டாகும்படி அலைகிறதோ அப்படியே பிள்ளைகளும் கேடான வழிகளில் சென்று, தங்கள் உடலைக் கெடுத்துக்கொண்டு தங்களையே அழித்துக்கொள்ளுவார்கள். இரண்டாவதாக, சரீர சுகத்தை மட்டுமல்ல தங்களது ஆத்தும சுகத்தையும் அவர்கள் இழந்து நரக ஆக்கினைக்கு உள்ளாவார்கள். நித்தியகாலமாக வேதனையை அனுபவிப்பார்கள். நம் பிள்ளைகளை அப்படிப்பட்ட அழிவிலிருந்து காப்பாற்றுவது நமது கடமை. ஆகையால், அவர்களை ஏற்றகாலத்தில் ஏற்றவிதத்தில் அன்போடு கண்டித்து வளர்ப்பது அவர்களுக்குத்தான் அதிக நன்மை பயக்கும் என்பதை நாம் மறந்துபோகக்கூடாது. பிள்ளை வருத்தப்படுவானே என்று எண்ணி இப்போது விட்டுவிட்டால் நாமே அவர்களைப் பாவப் படுகுழியில் தள்ளுகிறவர்களாக இருப்போம்.
எனவே, அன்பானவர்களே, மிகுந்த செல்லம் கொடுத்து பிள்ளைகளைச் சீரழிப்பதை இன்றே விட்டுவிடுவோம். நீதிமொழிகள் 22:6, பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான் என்று கூறுகிறது. அன்புள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சிட்சிக்கவேண்டும் என்ற வேத போதனையின்படி நடப்போம். அவர்கள் நன்றாக வாழ வழிவகுப்போம்.
ஜெபம்: பிதாவே, என் பிள்ளைகளை சரியான பாதையில் நடத்த, அவர்களை நித்திய அழிவிலிருந்து தப்பச்செய்ய, இப்போதே அவர்களை அன்புடன் கண்டித்து நல்வழிப்படுத்த எனக்கு உமது ஞானத்தையும் கிருபையையும் தாரும். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். ஆமென். தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments