ஞாயிறு, ஆகஸ்ட் 31 || எழுப்புதல் வீரர்களுக்கு என்ன அடையாளம்!
- Honey Drops for Every Soul
- Aug 31
- 1 min read
வாசிக்க: தானியேல் 9:17-19
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
- சங்கீதம் 126:5
எழுப்புதலைக் கொண்டுவர கர்த்தர் பயன்படுத்தும் மக்களிடம் சில விசேஷித்த குணாதிசயங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, அவர்கள் விசுவாச வீரர்களாக இருப்பார்கள். விதைப்பதோ அறுப்பதோ, எதுவானாலும் அவர்கள் நம்பிக்கையோடே செய்வார்கள். தாங்கள் கிறிஸ்துவுக்குள் படும் பாடுகள் வீணாவதில்லை என்ற உறுதி அவர்களிடத்தில் இருக்கும்.
இரண்டாவதாக, அவர்கள் உழைப்பில் சளைக்காதவர்களாக இருப்பார்கள். எவ்வளவுதான் அதிகமாக பிரயாசப்பட வேண்டியிருந்தாலும் முறுமுறுக்காமல், தங்களையும் தங்களுக்குண்டான யாவையும் கர்த்தருடைய ஊழியத்திற்கென்று அர்ப்பணிப்பார்கள். உழைப்பதைக் கடமையாக எண்ணாமல், தங்களுக்காக ஜீவனைக் கொடுத்த இயேசுவுக்காக மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
மூன்றாவதாக, அவர்கள் மிகுந்த பொறுமையுடையவர்களாக இருப்பார்கள். தங்களது உழைப்பின் பலனைக் காண அநேக ஆண்டுகள் ஆனாலும் பொறுமையுடன் காத்திருப்பார்கள்; தொடர்ந்து தேவ வசனமாகிய விதையை விதைத்துக்கொண்டே இருப்பார்கள்.
நான்காவதாக, அவர்கள் தைரியமும் உறுதியுமுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிங்கத்தைப்போலத் தைரியமுடையவர்களாக இருப்பார்கள். எதிரிக்கு அஞ்சாமல் உறுதியுடன் முன்னேறிச்செல்வார்கள்.
ஐந்தாவதாக, அவர்கள் ஜெபவீரர்களாகவும் இருப்பார்கள். கர்த்தருடன் தனிமையில் அதிக நேரம் செலவிடுவார்கள். ஜீவ நீரூற்றாகிய அவருடன் அதிகமாக உறவாடிக்கொண்டிருப்பதால், அவர்களுக்குள்ளிருந்து ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகள் புறப்பட்டு மற்றவர்களை நனைக்கும்.
நண்பர்களே, இப்படிப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்துகிற மக்களாக நாம் வாழ்வோமானால், நாமும் எழுப்புதல் வீரர்களாக கர்த்தரின் கரத்தில் பயன்படமுடியும். எனவே, ஜெபத்துடன், பொறுமையுடன், தைரியத்துடன், அர்ப்பணிப்புடன் ஊழியம் செய்வோம். சேனைகளின் கர்த்தர் நமக்குத் துணையிருப்பார்.
ஜெபம்: தேவனே, ஒரு ஆவிக்குரிய எழுப்புதல் தேவைப்படுகிற இந்நாட்களில் நான் சும்மாயிருந்துவிடாமல், நல்ல கிறிஸ்தவப் போர்வீரனாக தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும், பொறுமையுடனும், ஜெபத்துடனும் அழியும் ஆத்துமாக்களை உம்மண்டை கொண்டுவர கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments