ஞாயிறு, ஆகஸ்ட் 24 || எசேக்கியாவின் நாட்களில் ஏற்பட்ட எழுப்புதல்!
- Honey Drops for Every Soul

- Aug 24
- 1 min read
வாசிக்க: 2 நாளாகமம் 29: 27-36
... இஸ்ரவேல் புத்திரரே.. கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்... பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து.. கர்த்தரைச் சேவியுங்கள்... - 2 நாளாகமம் 30:6,8
எசேக்கியா யூதாவின் ராஜாவானபோது, அவன் ஆசாரியரையும் லேவியரையும் அழைத்து அவர்களைப் பரிசுத்தப்படுத்திக்கொண்டு, ஆலயத்தையும் பரிசுத்தமாக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஆலயத்திலிருந்த சகல அசுத்தங்களையும் எடுத்துவந்து கீதரோன் ஆற்றில் போட்டனர். அதன்பின் ராஜாவும் பிரபுக்களும் பலிகளுடன் ஆலயத்திற்குச் சென்றனர். இஸ்ரவேல் ஜனங்களும் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு அநேகம் பலிகளைக் கொண்டு வந்தார்கள். அதன்பின் கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வரும்படி இஸ்ரவேல், யூதாவுக்கும், எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான் எசேக்கியா. பூகோளரீதியாகப் பிரிந்திருந்த ஜனங்களை ஆவிக்குரிய ரீதியில் ஒன்றுகூட்ட எசேக்கியா எடுத்த முயற்சி இது. அழைப்பை ஏற்று பெருந்திரளான மக்கள் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை கொண்டாட எருசலேமிற்கு வந்தனர். அங்கே பெரும் சந்தோஷம் உண்டாயிற்று. இன்னுமொரு வாரத்திற்கு பண்டிகையை ஆசரிக்கும்படி கட்டளையிட்டான். பின்பு ஜனங்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். அங்கும் விக்கிரகத் தோப்புகளை வெட்டி மேடைபீடங்களை அகற்றி பரிசுத்தப்படுத்தினர். இப்படி அதுவரை இல்லாத ஒரு பெரிய எழுப்புதல் அந்நாட்களில் உண்டாயிற்று. வாரன் வியர்ஸ்பீ இதைக்குறித்து எழுதும்போது, இரண்டுவார எழுப்புதல் கூட்டங்களில் பங்குபெறுவது பெரிதல்ல; வீடு திரும்பியபின், எழுப்புதல் பெற்ற மக்கள் என்று, நிஜவாழ்வில் வாழ்ந்து காண்பிக்கவேண்டும் என்கிறார்.
அன்பு நண்பர்களே, நாம் எழுப்புதலைச் சந்திக்க விரும்பினால், முதலாவது செய்யவேண்டிய காரியம், வருடக்கணக்காக நாம் நம்மில் சேர்த்துவைத்திருக்கும் அசுசியான காரியங்களையும், நமது பாவங்களையும் அறிக்கையிட்டு ஜெபித்து, நம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போமானால், (ரோமர் 12:1,2) நிச்சயம் ஆண்டவர் ஒரு எழுப்புதலைக் கட்டளையிடுவார். ஜெபம்: பிதாவே, ஜீவனோடிருந்தாலும் செத்தவர்களைப்போல இருக்கும் எங்கள்மேல் எழுப்புதலின் ஆவியை ஊற்றும். எங்களை உயிரூட்டும். தீமையை எதிர்த்து நின்று, அழியும் ஆத்துமாக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க, உமது அன்பிற்குள் நடத்த உதவிடும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments