ஞாயிறு, ஆகஸ்ட் 17 || ஜெபக்குறைவின் விளைவு குறைப் பிரசங்கங்கள்!
- Honey Drops for Every Soul

- Aug 17
- 1 min read
வாசிக்க: எரேமியா 8:20 - 9:1
... கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும். - எரேமியா 13: 17
கர்ப்பவேதனைக்குப் பிறகு பிள்ளை பிறப்பது எப்படியோ அப்படியே ஆவிக்குரிய ஜாம்பவான்களின் போராட்ட ஜெபத்திற்குப்பின்னர்தான் எழுப்புதல் ஏற்படுமே ஒழிய தேனொழுகப் பிரசங்கிப்பதினால் மட்டுமல்ல என்று லியானார்ட் ராவன்ஹில் கூறுகிறார்.
கண்ணீர் சிந்தி ஜெபித்த ஜெபங்களின் பின்விளைவாகவே ஆவிக்குரிய எழுப்புதலும் வரும். ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட் அவர்கள் ஒவ்வொரு பிரசங்கத்தைச் செய்வதற்குமுன் தன் ஜெப அறையில் உடைந்த உள்ளத்துடனும், கண்ணில் கண்ணீருடனும் அதிகமாக ஜெபித்தார் என்பதுதான் இதன் அர்த்தம். அதனால்தான் அவரது பிரசங்கம் அநேகருடைய உள்ளங்களைக் கரையச்செய்து, முழங்கால்களில் விழச்செய்து, பாவ அறிக்கை செய்யவைத்தது. எழுப்புதல் வீரன், அக்கினி ஜுவாலை என்றெல்லாம் அவர் வர்ணிக்கப்பட்டார். 1742ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க ஐக்கிய தேசத்தில் அவர் பிரசங்கித்தபோது, மதியம் தொடங்கி இரவு பதினொரு மணிவரையில் மக்கள் மிகுந்த துக்கத்தோடும் கண்ணீரோடும் அறிக்கை செய்துகொண்டிருந்தனர். அந்நாட்களில் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை. எனவே, இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு வரவேண்டுமென்றால் நடந்துதான் வரவேண்டும். ஆனாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் பிரசங்கித்தபோது 30000 பேர் கூடிவந்தனர். அன்று மட்டும் 1700 பேர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ராப்போஜனத்தில் பங்கு பெற்றனர். ஆவியானவர் வல்லமையாக இடைப்பட்டபடியால் பெரிய எழுப்புதல் ஜார்ஜ் மூலம் உண்டாகி, அநேகம் ஆயிரம் பேர் கிறிஸ்துவினண்டை வர ஏதுவாயிற்று.
அன்பானவர்களே, இன்று இப்படிப்பட்ட எழுப்புதல் ஏற்படாததற்கு நாமும் ஒருவகையில் காரணமாக இருக்கிறோம். ஏனெனில் எழுப்புதல் வரவேண்டும் என்ற வாஞ்சையோ எதிர்பார்ப்போ இன்று நம்மிடையே இல்லை. எழுப்புதல் வரவேண்டுமென்றால் அதற்கு ஒரு விலைக்கிரயம் செலுத்தவேண்டும். அந்த விலைக்கிரயம், உடைந்த உள்ளத்துடனும் கண்ணீருடனும் கர்த்தரிடத்தில் மன்றாட நேரம் கொடுப்பதே ஆகும்.
கொடுப்போமா? ஜெபம்: தேவனே, எழுப்புதல் நாயகன் நீரே ஐயா! இன்று மக்களின் மத்தியில் ஒரு பெரிய எழுப்புதலை அனுப்பும் அப்பா! உண்மை, உத்தமம், மனதுருக்கம் மற்றும் அர்ப்பணிப்பும் கொண்ட, ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்ட பிரசங்கிகளை இன்று எழுப்பும். எங்கள் தேசமக்களையும் சந்தியும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments