ஞாயிறு, ஆகஸ்ட் 10 || அசாதாரணமானதைச் செய்ய தேவன் எளியவனை எடுக்கிறார்
- Honey Drops for Every Soul

- Aug 10
- 1 min read
வாசிக்க: 1 கொரிந்தியர் 1: 26-31
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், ... சொன்ன வார்த்தைகள். - ஆமோஸ் 1:1
எபிரெய மொழியில் ஆமோஸ் என்றால் பாரம். தெக்கோவா, யூதாவிலுள்ள சிறிய ஊர். இது எருசலேமிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது. இப்பகுதி மணல் பாங்காயிருப்பதால் விவசாயத்துக்கு அல்ல மேய்ச்சலுக்குப் பொருத்தமாயிருந்தது. ஆமோஸ் மந்தைகளை மேய்ப்பவன், காட்டத்திப்பழங்களை பொறுக்குபவன். அத்திப்பழங்களையும், ஆட்டுமயிரையும் எருசலேமுக்கு ஒவ்வொரு முறையும் அவன் கொண்டுவரும்போது, தன் ஜனங்கள் செய்யும் பாவத்தைக் காண்பான். ஆமோஸ் பெத்தேலில் தீர்க்கதரிசனம் உரைத்தான். இங்குதான் ஒரு பொன் கன்றுக்குட்டி ஸ்தாபிக்கப்பட்டது. (ஆமோஸ் 7:10-13) ஆமோஸின் நாட்களில் சட்டம் மீறப்பட்டது. தேசத்தின் பிரபுக்களோ சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, அதை தூண்டியும் விட்டார்கள்; ஒழுங்கின வரையறைகள் மிகவும் கீழ்த்தரமாயிருந்தது, மக்கள் எல்லாவித பாலியல் பாவங்களைச் செய்தனர்! எனவே ராஜாக்களிடமும் சமயத் தலைவர்களிடமும் சென்று, ஒரு எளிய, ஆனால் கடுமையான எச்சரிப்பைக் கொடுக்க ஆமோஸைத் தேவன் தெரிந்தெடுத்தார் - ஜனங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி, தேவனிடம் வரவேண்டும், அல்லது பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டும் என்ற செய்தியே அது! அவனுடைய நாட்களில் வசித்த அவனது ஜனத்தைக்குறித்த பாரத்தை ஆமோஸூக்குக் கர்த்தர் தந்தார். அவர்களது செயல்கள் தேவனை அப்பட்டமாய் அவமதித்தன, நேரடியாகத் தேவனைத் தூஷித்தன. எனவே, அவர்களுடைய கலகங்களைத் தேவன் எல்லா நாளிலும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று அவன் பாரப்பட்டான். பேதுரு, பவுல், தாவீது, மத்தேயு போல, பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் தெரிந்துகொண்ட பலவீனமானவர்களில் ஒருவனாய் இருந்தான். மேய்ப்பர்களுக்குள் இருந்த மேய்ப்பன் அவன், ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் அவனுடையதல்ல. அவை அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஆவியானவரின் வார்த்தைகள்!
அன்பர்களே, நாம் அதிகம் படிக்காதவர்களாய், பேச்சு சாதுரியம் அற்றவர்களாய், பொதுமக்களது செல்வாக்கைப் பெறாதவர்களாய் இருக்கலாம். ஒன்றை நினைவில் வைப்போம் - பலமுள்ளவர்களை வெட்கப்படுத்த தேவன் உலகத்தில் பலவீனமானர்களைத் தெரிந்துகொண்டார். எளிய மேய்ப்பனை இஸ்ரவேலின் அகந்தையைக் கடிந்துகொள்ளும் மனுஷனாய் மாற்றின தேவன், அவரது ராஜ்யத்தின் பணியை ஏதாவது ஒருவிதத்தில் இவ்வுலகில் செய்ய நம்மையும் மாற்றுவார். ஜெபம்: ஆண்டவரே, எளிய மேய்ப்பனான ஆமோஸை நீர் தெரிந்துகொண்டு, உம் ஸ்தானாபதியாய் அவனை ராஜாக்களுக்கு முன் நிறுத்தி, இஸ்ரவேலுக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பை பிரகடனம் செய்யவைத்தீர். பலவீனனான என்னை நீர் எடுத்து, உம் வல்லமை தந்து, உமது ஊழியம் செய்ய வைப்பீர். நன்றி. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments