ஞாயிறு, அக்டோபர் 26 || இரட்டை ஆசீர்வாதம்!
- Honey Drops for Every Soul

- 14 minutes ago
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: 1 இராஜாக்கள் 19: 1-9
... எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம். - 1 இராஜாக்கள் 19:7
கர்த்தர் செய்த இரண்டு அற்புதங்களைக் கர்மேல் மலையின்மேல் கண்ட எலியா, யேசபேலின் பயமுறுத்தும் வார்த்தைகளைக் கேட்டபோது 15 மைல்கள் பெயர்செபாவின் வனாந்திரத்திற்குள் நடந்து ஒரு சூரைச்செடியின் கீழ் அமர்ந்துகொண்டான். போதும் கர்த்தாவே, என் ஜீவனை எடுத்துக்கொள்ளும் என அவன் ஜெபித்தது அவனுடைய மனமடிவைக் காண்பிக்கிறது. ஆம்! மிகப் பெரிய தீர்க்கதரிசியான அவன், அதிக மன உளைச்சலின் காரணமாக விசுவாசத்தையே இழந்துபோன நிலைக்குத் தள்ளப்பட்டான். கர்மேல் மலை அற்புதங்கள் ஆகாபையும் அவன் மனைவியான யேசபேலையும் பாகால் வணக்கத்தைவிட்டு தேவனிடத்திற்குத் திருப்பும் என அவன் நம்பிக்கொண்டிருந்தான். ஆனால் அவனது எதிர்பார்ப்பு வீணாகிப்போனதைக் கண்டு, மனமடிவாகி, ஊழியத்தையே விட்டுவிடத் துணிந்தான். மனமடிவும், உடல் அசதியும் சேர்ந்து அவனை ஆழ்ந்த உறக்கத்திற்குள் தள்ளிவிட்டன. கர்த்தர் அவனைக் கரிசனையுடன் பார்த்தார். ஒரு தூதனை அனுப்பி, அவனுக்கு தணலில் சுடப்பட்ட சூடான அடையையும் தண்ணீரையும் கொடுத்து அவனைத் தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தினார். அவன் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டான். இரண்டாம் முறையும் தூதனைக்கொண்டு அவனை எழுப்பி பலப்படுத்தினார் கர்த்தர். அவரிடமிருந்து பெற்ற பலத்தினால் நாற்பது இரவுகள் நாற்பது பகல்கள் தொலைதூரம் நடந்து தேவபர்வதத்திற்கு அருகில் வந்துசேர்ந்தான் எலியா.
அன்பானவர்களே, சில சமயங்களில் நாமும் எலியாவைப்போல் மனமடிவாகிவிடலாம். நமக்கெதிரே நிற்கும் சவால்களை எதிர்கொள்வதற்குப்பதிலாக, பயத்தினால் தூரமாக ஓடிப்போக எண்ணலாம். ஆனால், நமது ஆண்டவர் நம்மைக் கைவிட்டுவிடாமல், நம்மேல் கோபம்கொள்ளாமல், கரிசனையுடன் நம்மைக் கண்ணோக்கிப் பார்த்து, தமது வார்த்தையென்னும் அப்பத்தாலும், தமது பிரசன்னத்தினாலும் பலப்படுத்தி, ஓட்டத்தை நாம் தொடர உற்சாகப்படுத்துகிறார். அவர் எத்தனை நல்லவர்!ஜெபம்: தேவனே, எனது வேலை, நான் செய்யும் ஊழியம், எனது கடன் சுமை, வியாதி, பாடுகள் ஆகியவை என்னை மனமடியச் செய்துவிடுகின்றன. தப்பிக்கொள்ள எனக்கு வழியில்லை. ஆனாலும் நீர் எனது பெலனும் என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். என்னை விடுவிப்பீர். உமக்கு நன்றி. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments