top of page

ஞாயிறு, அக்டோபர் 13 வாசிக்க: ஆதியாகமம் 14: 17-24

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Oct 13, 2024
  • 2 min read

எச்சரிக்கை - ஆவிக்குரிய வெற்றிக்குப்பின் சாத்தானின் தாக்குதல் வரும்


நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்...   - எபிரெயர் 13:5


லோத்து சிறையாகக் கொண்டுபோகப்பட்டான் என்று ஆபிரகாம் கேள்விப்பட்டவுடன், தன் வீட்டின் மனிதராகிய 318 பேருடன் அந்த ஐந்து ராஜாக்களைப் பின்தொடர்ந்து அவர்களை முறியடித்து லோத்துவையும் அவன் உடைமைகளையும் மீட்டுக் கொண்டுவந்தான். ஆபிரகாம் தன் எதிரிகளைத் தோற்கடித்துத் திரும்புகையில் சோதோமின் ராஜா அவனை சந்தித்து, ஜனங்களை எனக்குத் தாரும்,

ree

பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். ஆபிரகாம் தனக்காக அல்ல; லோத்துவின் பொருட்டு ஐந்து ராஜாக்களை தோற்கடித்ததினால் அவன் சோதோமின் ராஜாவிற்குப் பெரிய சேவையைச் செய்தான். போரில் மீட்டுக்கொண்ட பொருட்களை ராஜாவினிடமிருந்து ஈவாகப் பெறுவது உலகப்பிரகார மனிதனுக்கு இயற்கையானதாகவும் குற்றமற்றதாகவும் தோன்றலாம். ஆனால் விசுவாசியான ஆபிரகாம் தொலைநோக்குடன் பார்த்தான். உன்னதமான தேவனுக்கு இழிவு உண்டாக்கும் வகையில் தன்னுடைய இந்தச் செயலைப் பிற்காலத்தில் அந்தப் புறஜாதி ராஜா அனுகூலமாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் ஆபிரகாம் கவனமாக இருந்தான். அதற்காக அந்த ராஜாவிடம் கடன்பட அவன் மறுத்தான். மட்டுமன்றி, ஆபிரகாமிற்கு அந்த ஈவுகளைப் பெறுவதற்கு அவசியம் இருக்கவில்லை; அதை மறுப்பதால் அவன் ஏழ்மை அடையப்போவதுமில்லை. ஆண்டவரைத் தன் கேடகமாகவும், மகா பெரிய பலனாகவும் கொண்ட அவனுக்கு (ஆதியாகமம் 15:1) சோதோமின் ராஜா அளிக்கும் வெகுமதியைப் பெற எந்த அவசியமும் இல்லை. மட்டுமல்ல, ஆபிரகாம் சோதோம் ராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்கியிருந்தால் தன் சாட்சியை இழந்திருப்பான் - தனக்கு கிடைக்கப்போகும் ஆதாயத்துக்காக லோத்துவை ஆபிரகாம் காப்பாற்றினான், விசுவாசத்தினாலும் அன்பினாலும் அல்ல என்று அவனைக்குறித்து ஜனங்கள் பேசியிருப்பார்கள் அல்லவா!


அன்பானவர்களே, நாம் ஆபிரகாமைப் பின்பற்றுவோம். ஆவிக்குரிய வெற்றிக்குப்பின் முழு எச்சரிக்கையுடன் இருப்போம். அந்நேரங்களில்தான் எதிரியானவன் தந்திரமாக வந்து நம்மைத் தவறான வழியில் செல்லத் தூண்டுவான். யுத்தத்துக்கு முன் விழிப்புடன் இருப்பதைப்போல வெற்றி கிடைத்த பின்னரும் நாம் இருப்போமாக.

ஜெபம்:  ஆண்டவரே, தனக்குப் பொருள்களை ஈவாக அளித்த  சோதோமின் ராஜாவிடமிருந்து ஒரு சட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும் பெற மறுத்தான் ஆபிரகாம். அதை ஏற்றுக்கொள்வது ஆபிரகாமின் நடையை தீட்டுப்படுத்தியிருக்கும். நான் போரின் வெற்றிக்குப் பின் உமக்கு மகிமை செலுத்த, சாத்தானின் தாக்குதல்களுக்கு கவனமாக இருக்க உதவும். ஆமென்.


அன்பானவர்களே


இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12  மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து,  இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம்.  நீங்கள் எந்த அரை மணி  நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.  நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான, 

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்



Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page