ஞாயிறு, அக்டோபர் 12 || சிட்சைக்குப் பிறகு வரப்போகும் ஆசீர்வாதம்
- Honey Drops for Every Soul
- 6 days ago
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: யோபு 5: 17-27
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். - யோபு 5:17
வேதாகமம் முழுவதும் வியாபித்திருக்கின்ற சத்தியத்தை எலிப்பாஸ் யோபுவுக்குச் சொன்ன வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன - தேவனுடைய சிட்சையானது அவரது அன்பின் வெளிப்பாடாய் அமைகிறது. சிட்சையைத் தாங்குவது மிகவும் கடினம்தான், ஆனால், அது நாம் அவருடையவர்கள் என்று அடையாளம் காட்டுகிறது! எபிரெயர் 12:6, கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று கூறுகிறது. கர்த்தர் நம்மைச் சிட்சிப்பது அழிப்பதற்கல்ல, நம்மை இன்னும் தம் அருகே சேர்த்துக்கொண்டு, கிறிஸ்துவின் அளவுக்குத் தக்கதாக நம்மை உருவாக்குவதற்காகவே அவர் அப்படிச் செய்கிறார். தற்சமயம் துக்கமாய்த் தோன்றும் சிட்சை, தேவன் நம் வாழ்விலே வளர்ச்சியையும், முதிர்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்தும் கருவியாக இருக்கிறது.
அன்பானவர்களே, கர்த்தர் நம்மைச் சிட்சிக்கும்போது அதை வெறுக்காமல், தாழ்மையுடனும் விசுவாசத்துடனும் ஏற்றுக்கொள்ள நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். அது நம் கண்களுக்கு மறைக்கப்பட்டிருந்தும், ஒவ்வொரு சோதனைக்குப் பின்னால் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு. அவரது சிட்சை நாம் அலைந்துதிரியாதபடி நம்மைப் பாதுகாக்கிறது, நாம் விழும்போது நம்மைத் தூக்கியெடுக்கிறது, அவருடைய கிருபையில் சார்ந்திருக்கும்படி நமக்குக் கற்றுத்தருகிறது. யோபு இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு! நினைத்தும் பார்த்திராத சோதனைக்குள் அவன் கடந்துசென்றபோதும், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று சொல்லக் கற்றுக்கொண்டான். (யோபு 23:10) இறுதியில் தேவன் அவனை முன்னைவிட அதிகமாய் ஆசீர்வதித்தார்; சோதனையிலும் தமது நோக்கங்கள் வீணாய்ப்போகாது என்பதை நிரூபித்தார். சங்கீதம் 119:71ல், நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் என்று அறிக்கை செய்கிறான். கர்த்தருடைய அன்பின் கரங்களுக்குள் நம்மை ஒப்படைத்தால், சிட்சையும் பாரமாகாது, ஆசீர்வாதத்துக்கான பாதையாக அது அமைந்துவிடும். கர்த்தருடைய சிட்சையானது பரம தகப்பனுடைய கரிசனை, நம்மைக் கனிதருபவர்களாக உருவாக்கி, நித்திய மகிழ்ச்சி தரவே அவர் அப்படிச் செய்கிறார் என்பதை எண்ணத்தில் வைப்போம்.
ஜெபம்: பரலோக தந்தையே, உம் சிட்சை என்னை அழிக்க அல்ல, ஆசீர்வதிக்கவே கொடுக்கப்படுவதால் உமக்கு நன்றி. நான் சோர்ந்துவிடாமல், சகலத்தையும் என் நன்மைக்காக, உம் மகிமைக்காகவே செய்கிறீர் என்று அறிந்து, உம் சிட்சையை நம்பிக்கையுடன் ஏற்க எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments