ஞாயிறு, அக்டோபர் 05 || என் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, நான் விடுதலையானேன்.
- Honey Drops for Every Soul
- Oct 5
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: ஏசாயா 44: 2-23
... இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. - எபேசியர் 1:7
ஆதித் திருச்சபையிலே பாவமன்னிப்பை இயேசுவின் இரத்தத்தோடு இணைத்துதான் பிரசங்கம் பண்ணினார்கள் ‡ இயேசு மாத்திரமே மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுக்கமுடியும். (அப்போஸ்தலர் 5:31) தமது இரத்தம் சிந்தப்பட்டதினாலே, திரும்பி வரவே முடியாதபடிக்கு அந்தப் பாவங்களை எல்லையில்லா தூரத்துக்கு அவர் தூக்கிச் சென்றார். அந்த அளவுக்கு நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன! நம்முடைய மீறுதல்கள் மற்றும் பாவங்களை தொலைதூரம் கொண்டு சென்ற செயலானது, பழைய ஏற்பாட்டில் உள்ள சடங்கு ஒன்றை நம் மனதிற்குக் கொண்டுவருகிறது ‡ ஒவ்வொரு வருடமும், பாவநிவாரண நாளின்போது பிரதான ஆசாரியன் வனாந்தரத்துக்கு போக்காடு ஒன்றை அனுப்பிவிடுவான். (லேவியராகமம் 16) இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களில் ஒன்றை பிரதானஆசாரியன் கொன்று, அதனுடைய இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திலே உள்ள கிருபாசனத்தின்மேலும், அதின் முன்னும் தெளிப்பான். பின்னர் பிரதான ஆசாரியன் இஸ்ரவேலின் பாவங்களனைத்தையும் உயிரோடுள்ள வெள்ளாட்டுக்கடாவின் மேல் வைத்து அறிக்கையிடுவான். பின்னர், அந்த ஆட்டை காணாமற்போகத்தக்கதாக வனாந்தரத்துக்கு அனுப்புவான். நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்த தேவாட்டுக்குட்டி கிறிஸ்துவே போக்காடாகவும் இருந்து, பாவங்கள் அனைத்தும் என்றும் காணப்படாமலிருக்கச் செய்கிறார்! நம் எல்லா மீறுதல்களுக்கும் பாவங்களுக்கும் தகுதியற்ற நமக்குத் தேவன் அளிக்கின்ற ஒப்பிடப்படமுடியாத மன்னிப்பு எத்தனை அற்புதமானது! மீகா 7:18,19, அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? ... அவர் .. நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார் என்று கூறுகிறது.
அன்பானவர்களே, தேவன் நம் பாவங்களை மன்னித்து, தம்முடைய முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுகிறார்; இனி அவர் ஒருபோதும் அவற்றைக் காண்பதில்லை. கரும்பலகையை அவர் சுத்தமாகத் துடைத்துவிடுகிறார்! கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி செய்கின்ற இரத்தம் நம் கொடுமையான பாவங்களையும் மூடிவிடுவது எத்தனை ஆனந்தம்!
ஜெபம்: ஆண்டவரே, எனக்கு விரோதமாய் எழுதப்பட்ட கையெழுத்து என்னை எதிர்க்கமுடியாது; ஏனெனில் என் பாவங்களை நீர் தூரமாய்க் கொண்டுபோய் விட்டீர், அவற்றை நீர் நினைப்பதில்லை. எத்தனை ஆனந்தம்! சிந்தப்பட்ட உம் இரத்தத்துக்காக உமக்கு நன்றி ஆண்டவரே. இன்று ஜீவதேவன் உமக்கு ஊழியம் செய்யும்படிக்கு நான் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments