சனி, டிசம்பர் 14 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul

- Dec 14, 2024
- 1 min read
வாசிக்க: கலாத்தியர் 5:13-15
உங்கள் அன்பை கிரியையால் வெளிப்படுத்துங்கள்!
... நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசவாசம், சாந்தம், இச்சையடக்கம் ... - கலாத்தியர் 5:22,23
மூன்றாவதாக நாம் அறிந்துகொள்ளும் சத்தியம், அன்பானது நம்மை நீடியபொறுமை, தயவு, நற்குணம் என்ற கிரியை சார்ந்த பண்புகளுக்குநேராய் நடத்துகிறது என்பதே! இந்த வேதப்பகுதியில் பொறுமையானது நீடிய பொறுமை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அளவுக்கதிகமாய் நம்மைத் துன்புறுத்துபவர்களையும் நேசிப்பதுதான் இந்த நீடிய பொறுமையின் தன்மை. 1 தீமோத்தேயு 1:16ல் கிறிஸ்து இயேசு நம்மிடம் காட்டிய இத்தகைய பொறுமையை பவுல் நமக்குத் திருஷ்டாந்தமாகக் கூறுகிறார். தயவென்பது நினைவிலே கருணைகாட்டுவது; நற்குணம் என்பது அதை செயலில் வெளிப்படுத்துவது. நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய நினைப்பது தயவு; செய்ய நினைத்த நன்மையை செய்துவிடுவது நற்குணம் என்கிறார் ஜான் ஸ்டாட். இவை மூன்றுமே அன்பின் வெளிப்பாடே! நான்காவது சத்தியம், இந்த அன்பு நம்மை விசுவாசத்திற்கும், சாந்தத்திற்கும், இச்சையடக்கத்திற்கும் நேராய் நடத்துகிறது. இங்கே குறிப்பிடப்படும் விசுவாசம் என்ற வார்த்தை உண்மையாய் இருப்பது; அதாவது, நம் வார்த்தையை நிறைவேற்றி, கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி, நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடந்துகொள்வது என்று அர்த்தப்படுகிறது. சாந்தம் என்பது தாழ்மையாய் நடப்பது. நமக்கு பதிலுக்குப்பதில் செய்ய திராணியிருந்தும் நம்மைக் கடிவாளமிட்டு அடக்கி பணிவாக நடப்பதுதான் சாந்தமாகும். இச்சையடக்கம் நம்மையும் நமது உணர்ச்சிகளையும் நாம் கட்டுப்படுத்திக்கொள்வது எனலாம். கோபம், மாம்ச இச்சை, நாவின் வார்த்தை இவை அனைத்தையும் கட்டுப்படுத்துவதே இச்சையடக்கம். தன்னையே கொடுக்கும் அன்பு இந்த ஆவியின் கனியில் முதலாவதாகவும், தன்னையே கட்டுப்படுத்திக்கொள்ளும் இச்சையடக்கம் கடைசியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டுமே ஒன்றுக்கொன்று இசைவாய் செயல்பட்டாலேயொழிய, நம்மை நாம் கர்த்தருடைய சேவைக்கென்று அர்ப்பணிப்பது இயலாத காரியம்.
அன்பானவர்களே, இந்த வசனங்களை நாம் மனனம் செய்வது போதாது; அவற்றை நம் வாழ்வின் அனுபவமாக்கிக்கொள்வதும் அவசியம். எனவே, ஆவியானவருக்கு நம்மைக் கீழ்ப்படுத்தி அவரால் கனி தருவோம்.ஜெபம்: ஆண்டவரே, உமது ஆவியின் கனியாகிய அன்பை என வாழ்வில் நான் செயல்படுத்த எனக்கு கிருபை தாரும். உம்மைப்போல் நீடிய பொறுமையுடனிருந்து, சுயத்தை சாகடித்து, தயவையும் நற்குணத்தையும் வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு சேவை செய்ய எனக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments