சனி, ஜூலை 26 || தேவ வார்த்தையால் நம்மைக் காத்துக்கொள்வோம்!
- Honey Drops for Every Soul

- Jul 26
- 1 min read
வாசிக்க: 2 பேதுரு 1: 3-11
ஆகையால் பிரியமானவர்களே, ... நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். - 2 பேதுரு 3:14
ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை வெகுஅருகில் இருக்கிறது. வேதத்தில் வருகையைக்குறித்த 200க்கும் மேலான வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த உலகத்தினால் நாம் கறைபட்டுப்போவோமானால், பாவாழ்க்கை வாழ்வோமானால், அவர் வருகையில் அவரது முகத்தை நாம் எப்படி நேருக்கு நேர் நோக்கமுடியும்? எப்படி நீதியும், சமாதானமும், சந்தோஷமும் நிறைந்திருக்கும் அவரது ராஜ்யத்தில் நாம் பிரவேசிக்கமுடியும்? கேட்டுக்குப் போகிற வழி விசாலமானது, அதற்குள் பிரவேசிப்பவர்கள் அநேகர் என்பதையும், தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்லும் வழி மிகவும் இடுக்கமானது, வெகு சிலரே அதில் நுழைவார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம். (மத்தேயு 7:13,14) சரியான பாதையைத் தெரிந்துகொண்டு அதில் நடக்க நம்மாலான அனைத்தையும் செய்வோம். பரம ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வோம்.
அன்பானவர்களே, அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? முதலாவது, எப்படி இருளிலே நடக்கிற ஒரு மனிதன், தன் கையில் பிடித்திருக்கும் தீபம் காற்றில் அணைந்துவிடாதபடிக்கு மிகுந்த ஜாக்கிரதையுடன் காத்துக்கொள்வானோ அப்படி, பாவத்தினால் இருண்டுபோயிருக்கும் இவ்வுலகில் வாழும் நாமும் வேத வார்த்தையை நமது இருதயங்களில் காத்துக்கொண்டு வெளிச்சத்தில் நடக்கவேண்டும். வேதம் நம் கால்களுக்குத் தீபம், அது நம் பாதைக்கு வெளிச்சம்! 2 பேதுரு 1:4, உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் (தேவவார்த்தை) நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது. எனவே, எச்சரிக்கையுடனிருந்து அவரது ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வோம். ஜெபம்: தேவனே, இயேசுவின் வருகை வெகுசீக்கிரத்தில் நிச்சயமாய் நிகழப்போகிறது. அதற்கு நான் ஆயத்தமாகி, தேவராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியாகும்படிக்கு உமது வார்த்தையை என் இருதயத்தில் வைத்துக் காத்து அதன்படி நடக்க உமதாவியானவரின் வல்லமையைத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments