top of page

சனி, ஜூலை 19 || ஜாக்கிரதையாக இருங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 19
  • 1 min read


பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.. - லூக்கா 12:15


இன்றைய வேதப்பகுதியில் கேயாசியின் பேராசையைக் குறித்து வாசிக்கிறோம். பொருளாசையுள்ளவர்கள், அதைச் சேர்ப்பதற்காக பொய் சாட்சி, திருட்டு, தேவதூஷணம், கொலை போன்ற பல துர்ச்செய்கைகளில் ஈடுபடுகிறார்கள். கேயாசியும் பொருளாசையினால் பல பொய்கள் சொன்னான். முதலாவது, அவன் தனக்குத் தானே பொய் சொன்னான். (2 இராஜாக்கள் 5:20) நாகமானுடைய சுகம் கர்த்தரிடமிருந்து கிருபையாகக் கிடைத்த சுகம் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். சன்மானத்தை விரும்பி அதன்பின்னே ஓடுவது தவறு என்றும் அவனுக்குத் தெரியும். ஆயினும், பேராசை அவனை ஆட்கொண்டதினிமித்தம் அந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நாகமானின் பின்னே ஓடினான்.  இரண்டாவதாக, கேயாசி நாகமானிடம் பொய் சொன்னான்.  நாகமானிடம், இரண்டு தீர்க்கதரிசிகளின் புத்திரர்  அப்போதுதான் வந்ததாகவும் அவர்களுக்காக ஒரு தாலந்து வெள்ளியையும் இரண்டு மாற்று வஸ்திரங்களையும் பெற்றுவரும்படி எலிசா தன்னை அனுப்பினதாகவும் துணிகரமாகப் பொய் சொன்னான். நாகமான் அவன் கேட்டதற்கு அதிகமாகக் கொடுத்ததோடு அதை சுமந்துசெல்லுவதற்காக தன் வேலைக்காரர்களில் இருவரையும் அனுப்பினான். ஆனால், தன் இருப்பிடம் நெருங்கியபோது அந்த இருவரையும் சாதுரியமாக திருப்பி அனுப்பிவிட்டான் கேயாசி. மூன்றாவதாக கேயாசி எலிசாவிடமே பொய் சொன்னான். (வசனம் 25-27) ஒன்றும் நடக்காததைப்போல பாவனை செய்து தன் எஜமானனுக்கு முன் வந்து நின்றான் கேயாசி. ஆனாலும் தனது வஞ்சகத்தை தேவன் எலிசாவிற்கு வெளிப்படுத்திவிட்டார் என்பதை அவன் அறியாதிருந்தான். எனவே, எங்கே போயிருந்தாய் என்று எலிசா கேட்டபோது, உமது அடியான் எங்கும் போகவில்லை என்று அப்பட்டமாகப் பொய் சொன்னான். அவன் செய்த இந்தப் பாவங்களைக் கண்ணுற்ற கர்த்தர் அவனை குஷ்டரோகத்தால் வாதித்தார். 


அன்பானவர்களே, செல்வந்தராக இருப்பது தவறல்ல. ஆனால் பேராசையுடன் தவறான வழியில் பொருளீட்டுவது கூடாது. நாம் கவனமாக நடந்துகொண்டு கர்த்தரின் கோபத்திற்கு தப்புவோம்.

ஜெபம்: தேவனே, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பொருளாசைக்காரர்மேல் வந்த உமது கோபாக்கினைத்தீர்ப்பை கேயாசியின் வரலாறு மூலம் அறிந்தேன். நீர் இன்று கிருபையினால் என்னை விட்டுவைத்திருக்கிறீர். உம் வார்த்தைக்கு செவிகொடுத்து பொருளாசையை விட்டுவிட எனக்குக் கிருபை தாரும்.  ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page