சனி, ஜூலை 12 || மற்றவர்கள் பொருள்மேல் கண்ணை வைக்கவேண்டாம்!
- Honey Drops for Every Soul

- Jul 12
- 1 min read
வாசிக்க: 1 இராஜாக்கள் 21: 1-19
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
- நீதிமொழிகள் 28:20
பத்து கட்டளைகளில் கடைசி கட்டளை பிறனுடைய பொருளை இச்சியாதிருப்பாயாக என்று கூறுகிறது. இதுவே எல்லாக் கட்டளைகளிலும் மிகவும் கடினமான கட்டளை. ஏனெனில் மற்ற ஒன்பது கட்டளைகளும் நமது வெளிப்புறமான செயல்களைக் குறித்தவை. இது நமது இருதயத்தின் மறைவான எண்ணத்தைக் குறித்த கட்டளை. இஸ்ரவேலின் ராஜா ஆகாபின் அரமனைக்கு அருகில் நாபோத்துக்கு சொந்தமான ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது. அதை தனக்கு கீரைக்கொல்லையாக மாற்றிக்கொள்ள ஆகாப் விரும்பினான். நாபோத்தின திராட்சத்தோட்டத்திற்கான விலைக்கிரயத்தைக் கொடுத்துவிட அல்லது அதற்குப்பதில் வேறொரு இடத்தில் அவனுக்கு ஒரு திராட்சத்தோட்டத்தைத் தர ஆகாப் தயாராயிருந்தான். ஆனாலும் நாபோத்துக்கு மனமில்லாதிருந்தது. ஏனெனில் அது அவனது மூதாதையர் மூலம் அவனுக்குக் கிடைத்த சுதந்தரமாக இருந்தது. இதனால் ஆகாப் வெறுப்புடன் தன் வீட்டிற்குத் திரும்பி, தன் படுக்கையில் கிடந்து துக்கித்தான். அதைக் கண்ட யேசபேல் ஒரு சதித்திட்டம் தீட்டி கடைசியில் நாபோத்தைக் கொலை செய்தாள். அவனது திராட்சத்தோட்டத்தை எடுத்துக்கொள்ள ஆகாபுக்கு ஆலோசனை கூறினாள். எந்த அநியாயமும் கர்த்தரது கண்களுக்குத் தப்புவதில்லை. அவர் எலியாவை ஆகாபிடம் அனுப்பி, தனது தீர்ப்பை அவனுக்குத் தெரியப்படுத்தினார். நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்தில் ஆகாபுடைய இரத்தத்தையும் நக்கும் என்றும், நாய்கள் யேசபேலின் இரத்தத்தை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும் என்றும் தீர்க்கமாக உரைத்தார். பல ஆண்டுகள் சென்றபின்பு அது அப்படியே நிறைவேறிற்று. (2 இராஜாக்கள் 9)
அன்பானவர்களே, நமக்கு இருப்பது போதுமென்று வாழ்வோம். மற்றவர்களுடையதை இச்சியாதிருப்போம். நமக்கு ஏதாவது தேவையென்றால் அதை நமது பரம தகப்பனிடம் சொல்லுவோம். அவர் தமது மகிமையின் ஐசுவரியத்தினால் அதை தமது சித்தத்தின்படி நமக்கு அருளுவார்.ஜெபம்: பிதாவே, எனது அண்டைவீட்டாரின் பொருட்களை பார்க்கையில் என் உள்ளம் அதன்மேல் இச்சிப்பது உண்டு. கிருபையாக என்னை மன்னியும். நீர் எனக்குத் தந்தவைகள் போதுமென்று திருப்தியாயிருக்க கிருபை தாரும். என் ஆசையெல்லாம் உம் அடியானாயிருப்பதாகவே இருக்கட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments