top of page

சனி, ஜூலை 05 || தேவ வார்த்தையைத் தியானியுங்கள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 5
  • 1 min read


கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  - சங்கீதம் 1:2


தியானம் என்பது ஒரு உருவகச் சொல்; அது ஒரு பசு அசைபோடுவதைக் குறிக்கும் சொல்லோவியம். தன் வயிற்றில் பல அறைகளைக் கொண்டுள்ளது பசு. குளுமையான காலையில் அது புல்லைத் தின்கிறது. பின்னர், நடுப்பகல் வெப்பத்தில், அது ஒரு மரத்தின் கீழ் படுத்து, உண்டதை அசைபோடுகிறது; காலை தின்ற உணவை அசைபோடும்படி மறுபடியும் வாய்க்குக் கொண்டுவருகிறது. மீண்டும் மீண்டும் இந்த செயல்முறை தொடர்கிறது. தியான வேளையில் இதையே நாம் நடைமுறை ஆக்குகிறோம். வாசித்ததை மறுபடியும் ஞாபகத்தில் கொண்டுவருகிறோம். வேதத்தைத் தியானிக்காமல் படிப்பது, அசைபோடாமல் உண்பது போலிருக்கிறது! புறம்பான மனுஷனுக்கு செரிமானம் எப்படித் தேவையோ அப்படியே உள்ளான மனுஷனுக்குத் தியானமும் தேவை. நாம் உண்ணுகின்ற உணவு செரிமானம் ஆகாவிட்டால் நாம் சுகவீனப்படுவோம் அல்லவா!


  அன்பானவர்களே, நம்மில் பெரும்பாலோர் வேதத்தை கவனக்குறைவுடன் ஏனோதானோவென்று வாசிப்பதால் அது நம்மில் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை. எனவே, நம் வாழ்க்கையில் தேவ வார்த்தையானது தெளிவற்றதாய், வல்லமையற்றதாய்ப் போய்விடுகிறது. வேதவசனத்தால் நம் உள்ளத்தை நிரப்புவோமானால், நாம் ஒரு முடிவை எடுக்கையில் அல்லது சோதனையைச் சந்திக்கையில் அந்த சூழ்நிலைக்கேற்ற வசனம் தானாகவே நம் நினைவிற்கு வந்துவிடும். வேதத்தை நாம் அதிகமாக வாசித்து, அடிக்கடி வாசித்து, அசைபோட்டு இரவும் பகலும் தியானிப்போம். இரவில் கண்விழிக்கும்போது வசனம் ஒன்றை நினைவிற்கு கொண்டுவருவோம். காலை கண்விழித்து எழுகையில், நாம் எப்படி உணர்ந்தாலும் வசனத்தை மனதில் கொண்டுவருவோம்; தேவ வசனமே நாளின் முக்கிய அங்கமாய் மாறட்டும். வசனம் மூலமே கர்த்தர் தம்மை வெளிப்படுத்துவார். தேவ வசனம்தான் நமக்குப் புத்துணர்ச்சியையும் ஊக்கத்தையும் கொண்டுவரும். 

ஜெபம்: ஆண்டவரே, உமது வசனத்தை அவசரமாகவோ அல்லது சடங்காகவோ  நான் வாசிக்காமல், அதைத் தியானிக்கவேண்டும். பசு புல்லை அசைபோடுவதுபோல, வசனத்தை ஒவ்வொரு காலையிலும் மனதில் கொண்டுவந்து, நாள்முழுதும் உற்சாகமடைவேன். வசனம் மூலம் நீர் உம்மை எனக்கு வெளிப்படுத்தும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page