சனி, ஜூன் 28 || மனமேட்டிமை தலைதூக்கி நிற்கிறதா? ஜாக்கிரதை!
- Honey Drops for Every Soul

- Jun 28
- 1 min read
வாசிக்க: எசேக்கியேல் 28:11-19
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. - நீதிமொழிகள் 16:18
பெருமை அல்லது அகந்தையை கர்த்தர் அறவே வெறுக்கிறார். 1 பேதுரு 5:5, பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் என்று கூறுகிறது. இன்றைய வேதப்பகுதியில் சாத்தானுடைய மனமேட்டிமையைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அவனைக் கர்த்தர் உருவாக்கினபோது அவன் கீழ்ப்படிதலுள்ள ஒரு தூதனாகத்தான் இருந்தான். ஆனால் பிற்பாடு அவன் கலகம்செய்து அவரது சிங்காசனத்துக்கு மேலாக தன்னை உயர்த்த முற்பட்டான். எசேக்கியேல் 28:12, அவனை முத்திரை மோதிரம், ஞானத்தால் நிறைந்தவன், பூரண அழகுள்ளவன் என்று வர்ணிக்கிறது. பத்மராகம் போன்ற ஒன்பதுவித விலைமதிப்பற்ற இரத்தினங்கள் அவனை மூடிக்கொண்டிருந்தன. அவன் காப்பாற்றுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப், தன் வழிகளில் குறைவற்றவனாக இருந்தவன், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உலாவினவன். (வசனம் 14,15) ஏசாயா 14:12ல், அவன் விடிவெள்ளியின் மகன் (லூசிபர்) என்று அழைக்கப்படுகிறான். இவ்வளவு பெருமை அவனுக்கிருந்தும் தன்னைக் கர்த்தருக்கும் மேலாக அவன் உயர்த்தப்பார்த்ததினிமித்தம் அவன் அவரது சமுகத்தினின்று விலக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அவன் இந்த உலகத்தின் அதிபதி என்னப்படுகிறான். இவனை நம் ஆண்டவர் இயேசு சிலுவையிலே சிந்திய இரத்தத்தினாலே தோற்கடித்தார். வெளிப்படுத்தின விசேஷம் 20:10, கர்த்தர் இந்த சாத்தானை ஒரு நாளிலே நரகத்தில் தள்ளிப்போடுவார் என்று தெளிவாகக் கூறுகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம் அவனது மனமேட்டிமையாகிய அகந்தை!
நான் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கியிருந்தால் அது அநேக பிரச்சனைகளைக் கொண்டுவருகிறது. எனவே, நம்மை நாமே இன்று ஆராய்ந்துபார்ப்போம். நமக்குள் பெருமை காணப்பட்டால், உடனே நம்மைத் தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தி மனந்திரும்புவோம். நாம் பெற்றிருக்கிற எந்த தாலந்தும் நமக்கு கர்த்தர் அருளின வரமே. அப்படியிருக்க நாம் பெருமை கொள்வது தகாது. தாழ்மையுள்ளவர்களுக்குத்தான் கர்த்தரது கிருபை கிடைக்கிறது. எனவே தாழ்மையுடன் நடந்து அவர் கிருபை பெறுவோம். ஜெபம்: தேவனே, நான் பெற்றிருக்கும் கல்வி, ஐசுவரியம், அந்தஸ்து எல்லாமே நீர் எனக்குக் கிருபையாகத் தந்தவை. எனவே, நான் பெருமைபாராட்டாமல் உமக்கு முன்பாக மனத்தாழ்மையைத் தரித்துக்கொள்ள உதவிடும். உமது கிருபையை நான் வீணடித்துவிடாமல் இருக்க விரும்புகிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments