சனி, ஜூன் 21 || கண்களைக் காத்துக்கொள்ளுங்கள்!
- Honey Drops for Every Soul

- Jun 21
- 1 min read
வாசிக்க: ஆதியாகமம் 3: 6,7
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். - சங்கீதம் 119:37
ஒரு மனிதனின் கண்களே, அவனை அதிக அளவில் இச்சைக்கு உட்படுத்தி சோதனைக்குள் வீழ்த்திவிடுகின்றது. நாம் காண்பவை எவையோ அவை நம் மனதில் படம்போல் பதிந்து நினைவில் நின்றுவிடுகிறது. எனவேதான் படக்காட்சிகளை நம்மால் மறக்கமுடிவதில்லை. ஆண்டவர் இயேசு, கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும் என்று கூறினார். (மத்தேயு 6:22,23) ஏவாளுடைய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். முதலில் அவள் தோட்டத்தில் இருந்த கனியைக் கண்களால் பார்த்தாள். இந்தக் கனி பார்வைக்கே இவ்வளவு இன்பமாயிருக்கிறதே, புசிப்புக்கு எவ்வளவு நல்லதாயிருக்கும் என்று அவள் நினைத்தாள். உடனே, நாவில் நீர் ஊற, கால்கள் தன்னால் அந்த மரத்தின் அருகில் செல்ல, கைகள் அந்தக் கனியைப் பறித்து வாயில் போட, ருசித்து விழுங்கினாள். ஐயோ! பரிதாபம்! கண் வழியாய் பாவம் அவளை வளைத்துப் போட்டது.
அன்பானவர்களே, நமது கண்களை நாம் காத்துக்கொள்ள வேண்டும். உங்களில் சிலருக்கு கண்வலி ஏற்பட்ட அனுபவம் இருக்கும். அப்போது மருத்துவர் தரும் சொட்டு மருந்தை கண்களில் இட்டு நிவாரணம் பெறுகிறோம் அல்லவா? அப்படியே, நம் கண்களை அனுதினமும் இயேசுவின் இரத்தத்தால் கழுவிக்கொள்வோம். அப்போது அவை பரிசுத்தமாக்கப்பட்டு பரிசுத்தமானவைகளையே பார்க்கும். நமது சரீரமும் கறைபடாமல் பரிசுத்தமாகக் காக்கப்படும். ஜெபம்: தகப்பனே, என் கண்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன். அவைகளை ஜீவபலியாக ஏற்றுக்கொள்ளும். மாம்சத்துக்குரிய இச்சைகளால் என்னையும் கெடுத்து என் சரீரத்தையும் கெடுத்துப்போடாமல் இருக்க உமது திருக்குமாரன் இயேசுவின் இரத்தத்தால் என் கண்களைக் கழுவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments