சனி, ஜூன் 07 || நான் என்ன செய்யவேண்டும் சொல்லும் கர்த்தாவே!
- Honey Drops for Every Soul

- Jun 7
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 26: 9-19
ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை. - அப்போஸ்தலர் 26:19
தர்சு பட்டணத்தானாகிய சவுல் தமஸ்குவுக்குச் சென்றுகொண்டிருந்தான். இந்த பயணத்தில் சவுலின் மனதில் பல எண்ண ஓட்டங்கள், பல கேள்விகள்! ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டதை அவன் கண்ட நாளிலிருந்து இந்தப் போராட்டம் அவனுக்குள் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் ஸ்தேவானது தைரியமும் வைராக்கியமும், அவன் சாகும்போது கூறிய வார்த்தைகளும் சவுலுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அப்பொழுது, வானத்திலிருந்து சடிதியாக ஒரு ஒளி தோன்றிற்று. அவன் கீழே விழுந்தான். சவுலே சவுலே நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய் என்று ஒரு குரல் ஒலித்தது. பயந்துபோன சவுல், ஆண்டவரே நீர் யார் எனக் கேட்டபோது, நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்று அந்தக் குரல் பதிலுரைத்தது. இயேசுவா! நான் யார் மரித்துப்போன ஒரு தச்சன் என்று எண்ணினேனோ அந்த இயேசுவா? அதிர்ந்துபோன சவுல், நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்பதை நாம் வாசிக்கிறோம். ஆண்டவரின் சித்தத்தை அறிவதில், அவரது குரலைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும் என்பதே சவுல் கற்றுக்கொண்ட முதல் பாடம். எனவே, அவன் அவரது சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து அனனியாவிடம் ஞானஸ்நானம் பெற்று, ஆண்டவரின் சீஷனாக மாறிப்போனான்.
அன்பு நண்பர்களே, தான் கண்ட பரம தரிசனத்திற்கு பவுல் கீழ்ப்படிந்த அந்த ஒரே காரியம் துன்புறுத்துகிறவனாக இருந்த அவனை ஒரு நற்செய்தியாளனாக மாற்றியது. நித்தமும் கர்த்தருடைய சித்தம் செய்வதே அவனது வாழ்வின் குறிக்கோளாக மாறியது. இன்று நாம் எப்படி இருக்கிறோம்? சவுல் தமஸ்குவிற்குச் சென்ற வழியில் பெற்றதைப்போன்ற அனுபவம் நமக்கு ஏற்படாமலிருக்கலாம். ஆனால், அவர் தமது வார்த்தையினால் பேசும்போது, நாம் அதற்குக் கீழ்ப்படிகிறோமா இல்லையா எனபதுதான் முக்கியம். அவர் நம்மை வனைந்து பயன்படுத்தும்டி அவர் கரங்களில் நம்மை ஒப்புவித்து அவர் சொல்லுக்குக் கீழ்ப்படிவோம். அவர் நம்மைப் பயன்படுத்துவார். ஜெபம்: பிதாவே, உமது ஒரே தரிசனம் கொடியவனாக இருந்த பவுலை முற்றிலும் மாற்றியது எத்தனை அதிசயம். நானும் என்னை உமது கையில் களிமண்ணாக என்னை ஒப்படைக்கிறேன். என்னையும் உருமாற்றி உமக்கு விருப்பமான வகையில் பயன்படுத்தும். உமது திட்டத்தை செயல்படுத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments