சனி, செப்டம்பர் 27 || எப்போதும் கர்த்தரைத் தேடுகிறவர்களாக இருங்கள்!
- Honey Drops for Every Soul
- Sep 27
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: சங்கீதம் 63: 1-8
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். - 1 தெசலோனிக்கேயர் 5:17
பவுலின் ஊழியத்தினால் கிறிஸ்துவுக்குள் வந்தவன் எப்பாப்பிரா. அவன் ஒரு சிறந்த ஜெபவீரன். முதலாவது, அவன் இடைவிடாமல் ஜெபித்தான். (கொலோசெயர் 4:12) இரண்டாவதாக, எப்பாப்பிரா ஊக்கத்துடன் ஜெபித்தான். அவன் வியாகுலப்பட்டு, போராடி ஜெபித்தவன். மூன்றாவதாக, அவன் ஒருமுகமாக ஜெபித்தான். அதாவது ஆகாயத்தில் சிலம்படிக்காமல், தான் யாருக்காக எதற்காக ஜெபிக்கிறோம் என்று உணர்ந்து ஜெபித்தவன் எப்பாப்பிரா. குறிப்பாக கொலோசே, லவோதிக்கேயா மற்றும் எராப்போலியாவிலுள்ள மக்களுக்காக அவன் ஜெபித்தான் என்று கொலோசெயர் 4:13 கூறுகிறது. வாரன் வியர்ஸ்பீ இந்தப் பகுதியைக்குறித்து எழுதுகையில், ஏதோ ஒரு மதச் சடங்காச்சாரமாக ஜெபத்தைக் கையாளாமல், இந்த மக்களனைவரையும் மனதில் நிறுத்தி, அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜெபித்தான் எப்பாப்பிரா என்று எழுதுகிறார். நான்காவதாக, அவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஜெபித்தான். மேற்கூறப்பட்ட மூன்று பகுதிகளிலுள்ள விசுவாசிகள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாக இருக்கும்படியும், தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்து ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சியடைந்து பூரணப்படவும் ஜெபித்தான் என்று கொலோசெயர் 4:12 கூறுவதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அந்த மக்கள் உலக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஜெபிக்காமல் அவர்களது பூரண ஆவிக்குரிய வளர்ச்சிக்காக ஜெபித்தான். ஐந்தாவதாக, எப்பாப்பிரா தியாகத்துடன் ஜெபித்தான். பாரத்தோடு ஜெபிப்பதற்கு ஒரு விலை கொடுக்கப்படவேண்டும். கெத்சமெனேயில் கர்த்தர் ஜெபித்த விதத்தை நினைவுகூருங்கள். அவரது இரத்தம் வியர்வையின் பெருந்துளிகளாய் தரையில் விழுமளவிற்கு அவர் ஜெபித்தார். விலைகொடுக்கப்படாத எந்த ஜெபமும் பெரிதாய் எதையும் சாதிப்பதில்லை என்று ஜான் ஜோவெட் என்பவர் கூறுகிறார்.
பிரியமானவர்களே, எப்பாப்பிராவை பவுல் புகழ்ந்த காரணம் இப்போது நமக்குப் புரிகிறதல்லவா? நாமும் நம் தேச மக்களுக்காக, இப்படி ஊக்கத்துடன், இடைவிடாமல், போராடி, வியாகுலத்துடன் ஜெபித்தால் நமது தேசத்திலும் எழுப்புதல் நிச்சயம் உருவாகும்.
ஜெபம்: ஆண்டவரே, ஒரு மன்றாட்டு ஜெபவீரனாகவேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டு. ஆனாலும் ஜெபத்தில் என்னால் அதிக நேரம் தரித்திருக்கமுடிவதில்லை. என் தேசத்தில் எழுப்புதல் வரும்படிக்கு எப்பாப்பிராவைப்போல ஜெபிக்க எனக்கு உமது கிருபையைத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments