சனி, செப்டம்பர் 13 || விசுவாசத்தில் உறுதியாய்த் தரித்திருத்தல்
- Honey Drops for Every Soul

- Sep 13
- 1 min read
வாசிக்க: யாக்கோபு 1:2-6
.. நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. - எபிரெயர் 10:23
விசுவாசத்தில் உறுதியாய் தரித்திருப்பது எளிமையானது அல்ல. நம் வாழ்க்கையிலே எதிர்பாராத சோதனைகளும், நீண்டகால காத்திருத்தலும், மற்றும் பரத்திலிருந்து ஒரு பதிலும் வராத நொடிப்பொழுதுகளும் அவ்வப்போது வருகின்றன. ஆனால் ஆண்டவருடைய வார்த்தை நம்மைத் தள்ளாடாமல் நிற்க உற்சாகப்படுத்துகிறது. விசுவாசமானது உணர்ச்சிகளின் மேலோ, சாதகமான விளைவுகளின் மீதோ கட்டப்படாமல் தேவனது மாறாத குணநலனின் மீதே கட்டப்படுகின்றது. நமது பெலன் குன்றினாலும் நம் ஜெபங்களுக்கு பதில் வராவிட்டாலும் வாக்குத்தத்தம் செய்த தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். சார்லஸ் ஸ்பர்ஜன் கூறியதுபோல, தேவன் மிக நல்லவரானபடியால் அவரால் இரக்கமற்றவராக இருக்கவே முடியாது. அவர் மகா ஞானியானபடியால் அவரால் தவறு செய்யவே முடியாது. அவரது கரங்களின் கிரியையை நம்மால் பார்க்க இயலாதபோதும், அவரது இருதயத்தை நாம் நம்ப வேண்டும்.
அன்பர்களே, உங்கள் விசுவாசம் சோதிக்கப்படும்போது சோர்ந்துபோகாதிருங்கள். தேவனது வார்த்தையாகிய நிலத்தில் ஆழமாக வேர்களைச் செலுத்துவதற்கு சோதனைகள்தான் வாய்ப்புகளாக அமைகின்றன. பழைய ஏற்பாட்டில் யோபு தன் குடும்பத்தை, ஆஸ்தியை, சுகத்தை இழந்தான். ஆனால் தன் விசுவாசத்தில் உறுதியாய் நின்றான். முடிவில் தேவன் அவன் உறுதிப்பாட்டைக் கனப்படுத்தி அவனுக்கு அனைத்தையும் திரும்பக் கொடுத்தார். 1 கொரிந்தியர் 15:58ல் பவுல், ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, .. நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும்... இருப்பீர்களாக என்று கூறுகிறார். உறுதியாய்த் தரித்திருத்தல் என்பது வெறும் சகிப்புத்தன்மை இல்லை. அது செயல்படுகின்ற நம்பிக்கை. அது நீண்ட இருளான காலத்திலும் நம்பிக்கையைப் பற்றிக்கொள்வது; விளைவு என்ன என்று தெரியாவிட்டாலும் தேவனுக்குக் கீழ்ப்படிவது; பாதை தெளிவாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து முன்னேறுவது. நம் காத்திருப்பின் காலங்களில்தான் கர்த்தர் நம்மில் ஆழமாகக் கிரியை செய்கிறார். இருளிலும் உறுதியுடன் நிற்கும் விசுவாசமே பகலில் மிகவும் பிரகாசமாக இருக்கும். எனவே, நாம் காண்பவற்றின்மேல் அல்ல, நாம் விசுவாசிப்பவரின்மேல் நம்முடைய ஆதாரம் இருக்கட்டும்.ஜெபம்: பரம தகப்பனே, சவால்கள் எழும்பும்போது விசுவாசத்தில் உறுதியாய் இருக்க எனக்கு உதவும். உமது வாக்குத்தத்தங்களை நம்பி, நீர் எப்போதும் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து தைரியத்துடன் நடக்கக் கற்றுத் தாரும். நம்பிக்கையில் தளராமல் நிற்க என்னை பெலப்படுத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments