சனி, ஏப்ரல் 19 || இயேசு யார் என நூற்றுக்கதிபதி சரியாக அறிந்துகொண்டான்
- Honey Drops for Every Soul

- Apr 19
- 1 min read
வாசிக்க: மாற்கு 15: 33-39
... மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்! - மத்தேயு 27:54
இயேசு சிலுவையில் மரித்தபோது, ஐந்து அற்புதங்கள் நடைபெற்றன - இருள் சூழ்ந்தது, திரைச்சீலை இரண்டாய்க் கிழிந்தது, பூகம்பம் அதிர்ந்தது, மரித்த பரிசுத்தவான்கள் உயிர் பெற்று எழுந்தார்கள், நூற்றுக்கதிபதி சாட்சியிட்டான்! இவை அனைத்திலும் நூற்றுக்கதிபதியினது சாட்சியே மிகவும் பெரியது! கிறிஸ்துவினுடைய மரணத்தில் அந்த நூற்றுக்கதிபதிக்கு அதிக பங்கு இருந்தது. அவன் சிலுவையின் அடியில் நின்றபோது, இயேசு சொன்ன வார்த்தையைக் கேட்டான் - பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! அந்த மனந்திரும்பிய கள்ளனிடம் இயேசு காட்டின அன்பையும், தந்த பாவமன்னிப்பையும் அவன் கண்டான். பூமியில் அந்தகாரம் சூழ்ந்ததை பார்த்தான், இயேசு பலத்த சத்தமாய், முடிந்தது என்று கூறியதையும் அவன் கேட்டான். எல்லாவற்றுக்கும் மேலாய், வேதனையில் மற்றக் கள்ளர்கள் உரத்த குரலில் கதறுவதுபோல், சபிப்பதுபோல் இயேசு செய்யாமல், அமைதியுடன் தமது ஆவியைப் பரலோகப் பிதாவிடம் சமர்ப்பித்ததையும் பார்த்தான். இவையனைத்துமே நூற்றுக்கதிபதிக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதன் விளைவாகத்தான், மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்ற ஆச்சரியமான விசுவாச அறிக்கையை அவனால் கொடுக்கமுடிந்தது! யூதமதத் தலைவர்கள், பிரதான ஆசாரியன், ரோம அதிகாரிகள் அனைவருமே இயேசுவைப்பற்றி தவறாகப் புரிந்துகொண்டார்கள்; ஆனால், பரிசேயரும், வேதபாரகரும் தவறவிட்ட காரியத்தை இவனால் அடையாளம் காணமுடிந்தது. தேவதூஷணம் செய்பவராய், கலகக்காரராய் இயேசுவை அவர்கள் பார்த்தனர்; ஆனால் நூற்றுக்கதிபதியோ, அவரை தேவனாய்ப் பார்த்தான்!
அன்பானவர்களே, இதுவே அற்புதங்களில் உன்னதமான இருதயத்தை மாற்றின அற்புதம்! இன்றைக்கும் இயேசுவிடம் வருகின்ற எவருக்கும் இந்த அற்புதம் நிச்சயமாக நடக்கும்! நாம், இயேசுவை மேசியா என்று அறியாதிருக்கும் அநேகரின் கண்கள் திறக்கப்படவேண்டும் என்று ஜெபித்தால், இரட்சிப்பு என்ற பெரிய அற்புதத்தை அவர்களும் அனுபவிப்பார்கள்.
ஜெபம்: ஆண்டவரே, சிலுவையினடியில் ஏற்பட்ட எல்லா அற்புதங்களிலும், நூற்றுக்கதிபதியின் இரட்சிப்பே மிகப்பெரிய அதிசயம் என்று எண்ணுகிறேன். இந்த அற்புதத்தை இன்னும் அனுபவிக்காத மக்களுக்காக நான் பாரத்தோடு ஜெபிக்கிறேன். அவர்கள் எப்படியாகிலும் உம்மை அறிந்து, நீர் தரும் இரட்சிப்பை இலவசமாகப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவும். ஆமென். தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments