சனி, ஆகஸ்ட் 30 || அப்போஸ்தலர் நாட்களின் எழுப்புதல் இன்று வருமா?
- Honey Drops for Every Soul

- Aug 30
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 2:1-17
அவர் ... பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, ... இதைப் பொழிந்தருளினார். - அப்போஸ்தலர் 2:33
எழுப்புதல் என்பது திரள்கூட்டமான ஜனங்களின் மத்தியில் விசேஷித்த விளைவுகளைக் கொண்டுவரும் தேவனுடைய விசேஷித்த கிரியை என்று செல்வின் ஹயூக்ஸ் எழுதுகிறார். மார்ட்டின் வாயிட் ஜோன்ஸ், எல்லா எழுப்புதல்களுமே ஒருவகையில் பெந்தெகோஸ்தே அனுபவத்திற்கு ஒத்தவைகளே. சரித்திரத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு எழுப்புதலுமே ஆவியானவர் முதன்முதலில் வல்லமையாக ஊற்றப்பட்ட பெந்தெகோஸ்தே நாளின் மறுபதிப்பாகவே இருக்கிறது எனக் கூறுகிறார். அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை நாம் கவனமாக வாசித்தால், அன்று 120 பேர் மீது ஆவியானவர் மகத்துவத்துடனும், வல்லமையுடனும், விசேஷித்த விதத்தில் இறங்கியதை அறியலாம். பலத்த காற்றின் முழக்கம், அக்கினி மயமான நாவுகள் தோன்றி தனித்தனியாக ஒவ்வொருவர்மீதும் அமர்ந்த காட்சி, மற்றவர்களுடைய ஜென்ம பாஷை பாமரர்களாகிய சீஷர்களால் பேசப்பட்ட அதிசயம் அனைத்துமே அங்கு கூடியிருந்த யூதமக்களின் கவனத்தை சடிதியாய் ஈர்த்து அவர்களைத் திகைப்பிலாழ்த்தியது. தேவனுடைய மகத்துவங்களை தங்களது பாஷையிலே அந்தக் கலிலேயர் பேசக்கேட்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அந்தச் சமயத்தில்தான் பேதுரு பரிசுத்த ஆவியால் நிறைந்தவனாக எழுந்து நின்று பிரசங்கித்தான். அந்த ஒரே பிரசங்கம் 3000 ஆத்துமாக்களை தேவ ராஜ்யத்திற்குக் கொண்டுவந்தது! இதுவல்லவா எழுப்புதல்!
இருதயத்திலிருந்து இருதயத்திற்கு செல்லும் பிரசங்கத்தில் மட்டும்தான் வல்லமை வெளிப்பட்டு வியத்தகு மாற்றங்கள் ஏற்படுகின்றன. பேதுருவின் பிரசங்கம் இந்த வகையைச் சார்ந்தது என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில், அப்போஸ்தலர் 2:37, அவன் பேச்சைக்கேட்ட மக்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாகி நாங்கள் என்ன செய்யவேண்டும் எனக் கேட்டனர் என்று கூறுகிறது. உடனே பேதுரு அவர்களை மனந்திரும்புதலுக்கும் ஞானஸ்நானத்திற்கும் நேராக நடத்தினான். இன்றைய நமது சபைகளுக்கும் அப்போஸ்தலர் நாட்களில் இருந்த சபைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நம்மால் காணமுடிகிறதல்லவா? மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், நமது முழங்கால்களை மடக்கி, ஆவியில் நிரம்பிய பிரசங்கிமாரை தேவன் எழுப்ப ஜெபிப்போம். நமது சபைகளிலும் எழுப்புதல் காண்போம்.
ஜெபம்: தேவனே, கோழையாக உம்மை மறுதலித்த பேதுரு, பெந்தெகோஸ்தே நாளில் வல்லமையான பிரசங்கியாக மாறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இது ஆவியானவரது வல்லமையின் செயலே என அறிந்தேன். அந்த வல்லமை எங்கள் சபைகளிலும் காணப்பட ஜெபிக்கிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments