சனி, ஆகஸ்ட் 23 || பரிசுத்த அக்கினியைத் தூண்டிவிடுங்கள்!
- Honey Drops for Every Soul

- Aug 23
- 1 min read
வாசிக்க: லூக்கா 10: 1-9
... அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். - லூக்கா 10:2
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் மக்கள் பரிசுத்தமின்றி வாழ்ந்துகொண்டிருந்தனர். வேதவாசிப்பு, ஜெபம், சபைகூடிவருதல் ஆகியவை அசட்டை செய்யப்பட்டன. லண்டன் மாநகரில் மூன்று வீடுகளுக்கு ஒன்றில் நிச்சயம் மதுபானம் விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நாட்களில்தான், ஜான் வெஸ்லி, சார்ல்ஸ் வெஸ்லி மற்றும் ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட் ஆகியோர் லிங்கன் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களிலிருந்து சில மாணவர்களைக் கூட்டிச்சேர்த்து தேவனைத் தேடவும், சுவிசேஷ ஊழியம் செய்யவும் தொடங்கினர். ஊழியத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினபோதும், மூவரும் பயப்படாமல் தொடர்ந்து ஊழியம் செய்தனர். ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட், பிஷப் அவர்கள் தன் கையை என் தலையில் வைத்தமாத்திரத்தில் என் இதயம் உருகிற்று. அன்றே என் ஆவி ஆத்துமா சரீரத்தைக் கர்த்தருடைய சேவைக்கென்று ஒப்படைத்தேன் என்று கூறுகிறார். 22 வயதே நிரம்பிய வாலிபனாக இருந்தபோதிலும், இவர் வல்லமையுடன் பிரசங்கித்தபடியால் ஆயிரக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டனர். ஜான் வெஸ்லி ஒரே வருடத்தில் 1050 மைல்கள் ஆக்ஸ்போர்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துசென்று பிரசங்கித்தார். அவர் அமைதியாகப் பேசினாலும் வார்த்தையில் வல்லமை இருந்தபடியால், கேட்டவர்கள் பரிசுத்தத்தைக்குறித்த உணர்வடைந்தனர். சார்லஸ் வெஸ்லி பேசும்போது அவர் கண்களில் வழிந்த கண்ணீர் மக்களை அதிகமாக அசைத்தது. ஆண்டவரை ஏற்றுக்கொள்ளச் செய்தது.
அன்பானவர்களே, இந்த மூவரின் மூலம் எழும்பிய எழுப்புதல் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தேசங்களைக் கலக்கி இலட்சக்கணக்கானவர்களைக் கிறிஸ்துவண்டை கொண்டுவந்தது. இந்நாட்களில் இப்படிப்பட்ட ஊழியர்கள் நம் நாட்டிலும் எழும்ப ஜெபிப்போம். நாமும் ஆண்டவரது மகிமைக்காக எழும்புவோம். ஜெபம்: பிதாவே, ஆவிக்குரிய ஒரு அந்தகாரம் எனது தேசத்தை மூடியிருக்கும் இந்நாட்களில் திறப்பின் வாயிலில் நிற்க, தேசத்து மக்களுக்காக இரக்கத்தைத் தேட எனக்கு கிருபை தாரும். வெஸ்லியைப்போல, ஒயிட்ஃபீல்டைப்போல வைராக்கியத்துடன் நிற்கும் ஊழியரை இங்கும் எழுப்பும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments