சனி, ஆகஸ்ட் 16 || எழுப்புதலில்லா பிரசங்கம் வீண்!
- Honey Drops for Every Soul

- Aug 16
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 2: 14-18, 32-41
என்னுடைய ஊழியக்காரர்மேலும், .. ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்... (அப்போஸ்தலர் 2: 18)
இந்நாட்களில் நமக்கு அதிக துக்கத்தை வருவிக்கும் காரியம், ஜீவனற்ற சபைமக்களுக்கு, ஜீவனற்ற பிரசங்கங்களைச் செய்யும் ஜீவனற்ற பிரசங்கிமார்கள் அதிகரித்துக்கொண்டே போவதுதான் என்று லியோனார்ட் ராவன்ஹில் கூறுகிறார். ஆவியானவரின் வல்லமையால் நிறைந்த பிரசங்கிமார் அதிகம் இல்லை என்பதால்தான் இன்றைய பிரசங்கங்களில் ஜீவன் இல்லை. தன் முதல் பிரசங்கத்தைச் செய்வதற்கு முன்பு ஆவியானவரால் நிரப்பப்பட்டவன் பேதுரு; தமது ஊழியத்தைத் தொடங்கும் முன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார் இயேசு. ஞானஸ்நானம் பெற்று கரையேறினதிலிருந்தே இயேசு பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தார். அவருக்குப் பின்வந்த தேவதாசர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப்பெற்று ஊழியம் செய்ததால்தான் ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவினண்டை வழிநடத்தமுடிந்தது. தங்கள் பிரசங்கங்களை அவர்கள் தங்கள் முழங்கால்களில் நின்று பெற்றார்கள்; தங்கள் கண்ணீரினால் நனைத்தார்கள்; பெருமூச்சுடன்கூடிய ஜெபங்களால் வல்லமைப் படுத்தினார்கள். அதற்குப் பிறகே பிரசங்கித்தார்கள். எனவே, அந்தப் பிரசங்கங்களில் உயிரோட்டம், ஜீவன் இருந்தது; எழுப்புதல் தீ மூட்டப்பட்டது. ஜான் ஸ்மித், பரிசுத்த ஆவியின் நிரப்புதலோடு நாம் தேவனுடைய வீட்டில் நுழைந்தால்தான் நம்மால் அதிசயங்களையும் அற்புதங்களையும் காணமுடியும் என்றார்.
அன்பானவர்களே, நாம் கடைசி காலங்களில் வாழ்கிறோம். எனவே, தூங்குகிற சபைகளை உலுக்கும் பரிசுத்த ஆவியின் நிறைவுபெற்ற பிரசங்கிமார்களைக் கர்த்தர் எழுப்பித்தரவேண்டுமென்று மன்றாடுவோம். ஆவியில் அனல் இருந்தால் மட்டுமே பிரசங்கத்திலும் அனல் இருக்கும். ஜெபம்: தேவனே, எனக்குள்ளாக ஒரு மன்றாட்டின் ஆவியைத் தாரும். எனது சபையில் எழுப்புதலை எதிர்பார்த்து ஜெபிக்க கிருபை தாரும். எங்கள் போதகமார்களை ஆவியில் அனல்கொண்டு பிரசங்கிப்பவர்களாக மாற்றும். பாவத்தைக் குறித்த உணர்வை அவை கொண்டுவரட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments