top of page

சனி, ஆகஸ்ட் 09 || எதிரிகள் மோதினாலும் நம்மை மேற்கொள்ளமாட்டார்கள்

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 9
  • 1 min read


நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்...  - நீதிமொழிகள் 11:8


எப்படியாகிலும் தாவீதைக் கொன்றுவிடும்படி அவனை சவுல் பின்தொடர்ந்தான். தேவனோ தாவீதைப் பல வழிகளில் பாதுகாத்தார். முதலாவதாக, அவனது நண்பன் யோனத்தான், எந்தெந்த விதத்தில் சவுல் அவனை கொலைசெய்ய முயல்கிறான் என்று தாவீதிடம் தெரிவித்தான். தேவனே இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருக்க தாவீதை நியமித்தார் என்று யோனத்தான் அறிந்தபடியால், தானே தாவீதிடம் வந்து, உன்னதமானவரில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும், சவுலின் கை அவன்மேல் மேற்கொள்ளாது என்றும் தைரியம் சொல்லி திடப்படுத்தினான். (1 சாமுவேல் 23:16-18) அதற்கு முன்பதாகவே, 1 சாமுவேல் 20ம் அதிகாரத்தில், பலமுறை தன் தகப்போனோடுகூட யோனத்தான் இடைப்பட்டு, தாவீதின் குற்றமற்ற இரத்தத்தை அவன் சிந்தாதபடிக்குத் தடுத்தான் என்று நாம் வாசிக்கிறோம். 


அடுத்ததாக, 1 சாமுவேல் 23: 19-28ல், தேவன் வேறு ஒரு சம்பவத்தில் தாவீதை எப்படி பாதுகாத்தார் என வாசிக்கிறோம். சீப்ஊரார் சவுலினிடம் சென்று, தாவீது ஒளிந்திருக்கும் இடம் எங்கே என்று அறிவித்தார்கள். ஆனாலும், தேவன் தாவீதை எப்படிப் பாதுகாத்தார் என்று பாருங்கள்! தாவீதையும், அவன் மனுஷரையும், சவுல் மற்றும் அவன் மனுஷர் எல்லாப்பக்கமும் வளைந்துகொண்டார்கள். தாவீதை பிடிக்கப்போகும் சமயத்தில், ஒரு ஆள் சவுலிடம் வந்து, தேசத்தின்மேல் பெலிஸ்தர் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்று அறிவித்தான்! தேவன் ஏற்கனவே, பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுக்க வேண்டும் என்றும், தாவீதைச் சிறைப்பிடிக்கும் நேரத்திலே, சவுலின் மனுஷன் ஒருவன் வந்து செய்தியைச் சொல்லவேண்டும் என்றும் சரியாய் திட்டமிட்டிருந்தார். அதன் விளைவாக, சவுல் தாவீதைப் பின்தொடருகிறதைவிட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான். சேலா அம்மாலிகோத் என்று பேரிடப்பட்டது. அதன் அர்த்தம், பிரிவுகளின் பாறை! சவுலின் இருதயம் இந்தப் பக்கம் போவதா அல்லது அந்தப் பக்கம் போவதா என்று பிரிந்துபோனபடியால் அப்படியாயிற்று! வேறுவழியின்றி தாவீதைப் பின்தொடர்வதை விட்டு, பெலிஸ்தரோடு போரிட சவுல் தாவீதைவிட்டுப் பிரிய வேண்டியிருந்தது! அன்பானவர்களே, நமது வழிகள் கர்த்தருக்கு பிரியமானபடி இருந்தால், அவர் நம் எதிரியான பிசாசிடமிருந்து நம்மை பாதுகாத்து, தம் வாசஸ்தலத்தில் பத்திரமாய் வைப்பார்.   

 

ஜெபம்: ஆண்டவரே, சவுல் தாவீதைக் கொல்வது உம் சித்தமல்ல. இஸ்ரவேலின் ராஜாவாக்குவதே உம் திட்டம். எனவே, வலிமையான எதிரி சவுலிடமிருந்து அவனைப் பாதுகாத்தீர். என் எதிரியான பிசாசுக்கும் நான் பயப்படவேண்டாம். அவனைவிட நீர் பெரியவர்; அவன் என்னை தொடுவதற்கு விடமாட்டீர்.  ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page