செவ்வாய், ஜனவரி 28 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 28
- 1 min read
தேவனோடுள்ள உங்கள் உறவு எப்படியுள்ளது?
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. - சங்கீதம் 42:1
தேவனுடனான ஆழமான உறவு தானாகவே ஏற்பட்டுவிடுவதில்லை. அதை நாம் நாடித் தேடி, ஜெபித்து, வளர்த்து, பொக்கிஷம்போலப் பாதுகாத்து வைக்கவேண்டும். நம் தேவனோடு வைத்துள்ள உறவு எப்படிப்பட்டது என்று அறிய ஸ்டார்மீ ஓமாரிட்டன் என்பவர் கூறும் நான்கு காரியங்களை இன்று நாம் பார்ப்போம். முதலாவது அவர் கூறுகிறார்: அவர் உங்களுக்கு என்ன செய்கிறாரோ அதற்காக மட்டும் நீங்கள் அவரோடு நடப்பீர்களென்றால் உங்கள் உறவு மேலோட்டமானது. ஆனால், அவரை நேசித்து நீங்கள் அவருக்காக என்ன செய்யமுடியும் என்பதை அவரிடமே கேட்பீர்களென்றால் அது உங்கள் உறவு ஆழமானது என்பதை வெளிப்படுத்தும். இரண்டாவதாக அவர் சொல்வதாவது: உங்களது வாழ்க்கை கடினமாக இருக்கையில் மட்டும் அல்லது நெருக்கடியான நேரங்களில் மாத்திரம் அவரை நோக்கி நீங்கள் ஜெபித்தால் உங்கள் உறவு மேலோட்டமானது. ஆனால் அவரது சமுகத்திலிருப்பதை நீங்கள் விரும்புவதால் அவரிடம் நீங்கள் அடிக்கடி பேசுவீர்களென்றால் உங்கள் உறவு வளர்கிறது! மூன்றாவதாக, நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்காதபோது நீங்கள் ஆண்டவர்மீது கோபம் கொள்வீர்களானால் உங்கள் உறவு மேலோட்டமானது. உங்கள் வாழ்வில் நடப்பவைகள் எப்படியிருந்தாலும் நீங்கள் அவரைத் துதித்துக்கொண்டே இருப்பீர்களென்றால் உங்கள் உறவு வளர்கிறது! நான்காவதாக, உங்கள் ஜெபங்களுக்குப் பதிலைப் பெற ஆண்டவரை நீங்கள் கெஞ்சவேண்டும், அவரது கரங்களை நீங்கள் அசைக்கவேண்டும் என நினைக்காமல், அவரது சித்தத்தின்படி கேட்டால் நீங்கள் பதிலைப் பெறுவீர்கள் என விசுவாசித்தால் உங்கள் உறவு மேலான உறவாக மாறுகிறது.
அன்பானவர்களே, தேவனோடு நமது உறவு அதிகமாகப் பலப்படவேண்டுமென்று நாம் விரும்பினால் நாம் செய்யவேண்டியது, அவரோடு ஒவ்வொரு நாளும் அதிகமான நேரத்தைச் செலவிடுவது மாத்திரமே! அதாவது அவரது வார்த்தையை வாசித்து, தியானித்து, ஜெபத்தின் மூலம் அவரோடு அளவளாவிக்கொண்டிருப்பதால் மட்டுமே அந்த உன்னத உறவு ஆழமாக வேரூன்றி வளரும்.
ஜெபம்: ஆண்டவரே, உம்முடன் ஒரு ஆழமான நெருங்கிய உறவுகொள்ள நான் ஆர்வமுடன் வாஞ்சிக்கிறேன். நீர் யாராயிருக்கிறீர் என்பதற்காக உம்மை நேசிக்க எனக்கு கிருபை தாரும். கலங்கும் நேரத்தில் மட்டுமல்ல, எப்போதும் உம்மோடு உறவாட, உம் சித்தத்துக்கு கீழ்ப்பட்டிருக்க அருள்செய்யும். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments