செவ்வாய், ஜூலை 29 || எந்த சூழ்நிலையிலும் இயேசுவை மகிமைப்படுத்து!
- Honey Drops for Every Soul

- Jul 29
- 1 min read
வாசிக்க: பிலிப்பியர் 1:12-14
.. நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து...
- எபேசியர் 4:1
விசுவாசிகளின் வாழ்வில் வரும் பாடுகள், நம்மைப் பெலப்படுத்தி நமது ஆவிக்குரிய வாழ்வில் வளருவதற்காக கர்த்தரால் அனுமதிக்கப்படுபவையே! இந்த உண்மை வேதாகமம் முழுவதுமாகப் பரவலாகக் கூறப்பட்டிருப்பதை நாம் காணலாம். உதாரணத்திற்கு, பவுல் ஒருமுறை புறஜாதியாரை ஆலயத்திற்குள்ளாகக் கொண்டுவந்து பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்திவிட்டான் என்று அவனைக் குற்றப்படுத்தி அவனுக்கெதிராக மக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டனர் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள். இதைக்கேட்டு வெகுண்டுபோன கூட்டம் பவுலைக்கொலை செய்ய எத்தனித்ததினிமித்தம் எழுந்த கலவரத்திலிருந்து அவனைக் காப்பாற்றும்படி சேனாதிபதி அவனைக் கைதுசெய்து காவலில் வைத்தான். (அப்போஸ்தலரங 21: 27-40) அதன்பின்பு அநேகப் பாடுகளை பவுல் அனுபவிக்கவேண்டியதாயிற்று. இறுதியில் அவன் இராயனால் விசாரிக்கப்படும்படி ரோமாபுரிக்குக் கொண்டுவரப்பட்டு சிறையிலிடப்பட்டான். ஆயினும் பவுல் இவற்றையெல்லாம் பொறுமையோடும் மகிழ்ச்சியோடும் சகித்தான். மேலும், இந்த சூழ்நிலையில்தான் அவன் பிலிப்பி சபைக்கு ஒரு கடிதத்தை எழுதினான். அந்தக் கடிதம் சிறியதுதான் என்றாலும் அதில் 19 முறை அவன் சந்தோஷமாயிருப்பதைக் குறித்து எழுதியிருக்கிறான். பிலிப்பியர் 1:12,13ல், சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாயிற்று என்று அவன் கூறுகிறான். மட்டுமல்ல, வேறொரு கடிதத்தில் தன்னை கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவன் என்று தன்னைக் குறித்து அவன் சொல்லிக்கொள்கிறான். (எபேசியர் 3:1) ரோமக் கைதியாக தன்னை எண்ணாமல் கிறிஸ்துவுக்காக கைதி என்று எண்ணினது பாராட்டத்தக்கதல்லவா? அவனிருந்த சூழ்நிலைகள் சுவிசேஷம் அறிவிக்க அவனுக்கு ஒருபோதும் தடையாயிருக்கவில்லை. அவன் தனது பாடுகளையும் வாய்ப்புகளாக்கிக்கொண்டான்.
அன்பானவர்களே, நம் வாழ்வில் நடந்த வேதனையான சம்பவங்களை நினைத்துப் புலம்பாமல், தேவன் அவற்றை உன்னத நோக்கத்திற்காகவே அனுமதித்தார் என்று எண்ணுவோம். எனவே நம் பாடுகள் நம்மை உடைக்க அனுமதிக்காமல், கிறிஸ்துவை மகிமைப்படுத்தவும், அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்க்கவும் அவற்றை எடுத்துக்கொள்வோம்.ஜெபம்: தேவனே, எனது எல்லாப் பாடுகளிலும் நீர் என்னோடே இருக்கிறீர் என்றுணர கிருபை தாரும். எநத சூழ்நிலையும் எனக்குக் கொடுக்கப்படும் வாய்ப்பே என அறிந்து உமது சுவிசேஷத்தை உரக்கக்கூறி அறிவிக்க உமது வல்லமை, பெலனைத் தாரும். உமது நாமமே மகிமைப்படட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments