top of page

செவ்வாய், ஜூலை 15 || பரிதானம் உள்ளத்தைக் கெடுக்கும்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Jul 15
  • 1 min read


பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். 

- யாத்திராகமம் 23:8


பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் பரிதானம் வாங்கும் பழக்கம் வியாபித்திருந்தது. நியாயாதிபதிகள் 16:5ல், சிம்சோனிடமிருந்து அவன் பலத்தின் ரகசியத்தை அறிந்து சொல்ல 1100 சேக்கல் (13 கிலோ) வெள்ளியைப் பரிதானமாகத் தருவதாக பெலிஸ்தர் தெலீலாளிடம் வாக்களித்தனர்.  இயேசு இப்புவியில் வாழ்ந்த காலத்திலும், மத்தேயு 26:15ல், நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்று கேட்டு 30 வெள்ளிக் காசுகளை யூதாஸ் பெற்றதை நாம் வாசிக்கலாம். இயேசுவின் கல்லறையைக் காத்துக்கொண்டிருந்த சேவகர்களிடமிருந்து கல் புரட்டப்பட்டிருந்ததையும், இயேசு உயிர்த்தெழுந்ததையும் கேள்விப்பட்ட பிரதான ஆசாரியர்கள், சேவகர்களுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து, இயேசுவின் சீஷர்கள் அவரது உடலைக் களவாகக் கொண்டுபோய்விட்டதாகப் பொய் சொல்லத் தூண்டியதை மத்தேயு 28:15ல் வாசிக்கலாம். பவுல் சிறையிலிருந்தபோது அவனை விடுவிக்க விரும்பிய பேலிக்ஸ் அவனிடமிருந்து லஞ்சத்தை எதிர்பார்த்தான் என்பதை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். 


அன்பானவர்களே, பரிதானம் கர்த்தர் வெறுக்கும் காரியம் என்பதை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துவதற்காகவே இவைகள் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீதிமொழிகள் 17:23, துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான் என்று கூறுகிறது. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருப்பவனே கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவதற்கு தகுதிபடைத்தவன் என்று சங்கீதம் 24ல் வாசிக்கிறோம். பரிதானம் வாங்குபவன் சபிக்கப்பட்டவன் என்று உபாகமம் 27:25 கூறுகிறது. விசுவாசிகளாகிய நாம் லஞ்சம் வாங்காமல் கொடுக்காமல் வாழ உறுதியாயிருப்போம். அப்போது கர்த்தர் நம்மைக் கனப்படுத்துவார். 

 

ஜெபம்: தேவனே, லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் கொடுப்பவர்கள் மீது நீர் கொண்டுவரும் தீர்ப்பு எத்தனை பயங்கரமானது. இந்தப் பாவத்திற்கு நான் ஒருபோதும் அடிமையாகிவிடாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். சுத்தமான கைகள் மற்றும் மாசில்லாத இதயத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page