செவ்வாய், ஜூலை 08 || விசுவாசத்தோடே கேளுங்கள்; சந்தேகப்படாதீர்கள்
- Honey Drops for Every Soul

- Jul 8
- 1 min read
வாசிக்க: மாற்கு 11: 22-24
ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; ... - யாக்கோபு 1:6
பொதுவான தவறான புரிந்துகொள்ளுதலுக்கு எதிராக, சந்தேகம் என்பது அவிசுவாசம் போலல்ல; அது விசுவாசத்துக்கு எதிர்ப்பதமல்ல! மாறாக, விசுவாசம் அவிசுவாசம் இரண்டுக்கும் இடையே தொங்குகின்ற ஒரு மனநிலை. ஒன்றை உண்மை என ஒருமனமாய் ஏற்றுக்கொள்வதுதான் விசுவாசம்; அவிசுவாசம் என்பது ஒரே மனதுடன் ஒன்றை ஏற்காமல் நிராகரித்துவிடுவது - ஆனால், சந்தேகம் என்பது இரண்டுக்குமிடையே தடுமாறி, இருமனதுடன் இருப்பது! கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் வெறும் சுகமான சூழ்நிலை விசுவாசிகளாயிருக்கக்கூடாது; சத்தியத்திற்கு உண்மையாய் உடன்பட்டிருக்கவேண்டும். மோசமான கால சூழ்நிலையிலும் நல்ல கால சூழ்நிலையிலும், இரவிலும் பகலிலும், தலைகீழாகவும் நேராகவும் விமானத்தை இயக்கும் அனுபவம் மிக்க விமானியைப்போல நாமும் இருக்க வேண்டும்! விசுவாசத்திலும் கார்காலங்கள் வந்துபோகும், இருண்ட இரவுகள் ஆத்துமாவைத் துக்கப்படுத்தும்; ஆனாலும் தேவனுடைய சத்தியமும் வாக்குத்தத்தங்களுமாகிய கருவிகளை இறுகப் பிடித்துக்கொண்டவர்களுக்கு பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும்!
அன்பானவர்களே, எதிர்பாராத சோதனைகளுக்குள் நீங்கள் போக நேரிட்டால், உங்களது பதில் செயல்களில் ஒன்று, உங்கள் ஆத்துமாவில் புதைந்துகிடக்கும் சந்தேகங்களுக்குச் செவிகொடுப்பதாக இருக்குமா? அடுத்த முறை நீங்கள் பலவித சோதனைகளால் சூழப்பட்டால், சங்கீதக்காரன் சங்கீதம் 42:5ல், என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு என்று சங்கீதக்காரன் கூறுகின்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். ஊக்கம் அடையுங்கள் - நம் பரம பிதா அவர் பிள்ளைகள் என்றென்றும் நசுக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை - காலைதோறும் சூரியன் கட்டாயம் உதிக்கிறதுபோல, தேவ ஜனங்கள் சிலவேளை இருளிலே நடக்க நேர்ந்தாலும் கட்டாயம் அவர்களுக்கும் வெளிச்சம் உதிக்கும்! எனவே, சந்தேகங்கள் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, தேவன்மேல் உங்களது விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஜெபம்: ஆண்டவரே, உம்முடைய உண்மைத்துவத்தை வல்லமையை நம்பாமல் சந்தேகிப்பவர்போல நான் இருக்கமாட்டேன். விசுவாசத்தில் நிலைத்திராது, வெளிப்புற சக்திகளுக்கு அடிபணியாமல், உம் வார்த்தையை, வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டு, கடின காலங்களிலும் உறுதியுடன் நிற்க நீர் உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments