top of page

செவ்வாய், செப்டம்பர் 30 || பரனை நேசியுங்கள்! பிறனையும் நேசியுங்கள்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Sep 30
  • 1 min read

தெளிதேன் துளிகள் வாசிக்க: மத்தேயு 25: 31-46


... தபீத்தாள் என்னும் பேருடைய சீஷி.. நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.  - அப்போஸ்தலர் 9:36


அப்போஸ்தலர் 9:36-41வரை தபீத்தாளைக்குறித்து  கூறப்பட்டுள்ளது. யோப்பா பட்டணத்தில் வாழ்ந்த தபீத்தாள், இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடித்து வந்த ஒரு நல்ல விசுவாசி. தனது நற்கிரியைகளாலும் தருமங்களாலும் ஏழைகளுக்கு மிகவும் உதவியாயிருந்தவள் அவள். யாவராலும் நேசிக்கப்பட்ட அவள், வியாதிப்பட்டு மரித்துப்போனாள். ஆனால் தேவன், பேதுருவின் மூலம் தபீத்தாளை உயிரோடெழுப்பி அற்புதத்தைச் செய்தார்.


அன்பானவர்களே, மேற்கூறப்பட்ட சம்பவத்திலிருந்து நமக்கு தபீத்தாளைப்பற்றி அதிகமாய் அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், ஆண்டவர் இயேசு மத்தேயு 22:37,39ல் கூறிய கட்டளையைத் தவறாமல் பின்பற்றியவள் என்பதை உறுதியாக நாம் அறிந்துகொள்ள முடியும். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு மனதோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூருவாயாக. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே அவர் கூறிய கட்டளை. அதுமட்டுமா! மத்தேயு 25:40ல், மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று அவர் கூறியிருக்கிறாரே. தபீத்தாள் அவரது வார்த்தைக்கேற்றபடி, அவரையும் மற்றவர்களையும் நேசித்து வாழ்ந்தபடியால் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்தாள். எனவே, அவளது வியாதி அவளை மரணத்துக்கேதுவாக நடத்தியபோதிலும் கர்த்தர் அவளைக் கைவிடவில்லை. தமக்கு நெருக்கமான சீஷனை அனுப்பி அவளது ஜீவனை மீட்டுத்தந்தார். லித்தாவுக்கு பேதுரு வந்தது தற்செயலாக நடந்த காரியமல்ல. தபீத்தாளின் உயிரை மீட்டுத்தரும்படி தேவன் திட்டமிட்டிருந்தபடியினால் அவனை அங்கே அனுப்பினார். இன்று நாம் நமது ஆண்டவரை நேசிக்கிறோமா? மற்றவர்களை நேசித்து அவர்களுக்கு உதவிகள் செய்கிறோமா? அப்படியானால் அவர் நம்மேல் பிரியமாயிருந்து நமது ஆபத்துக்களில் நம்மைத் தப்புவிப்பார்; நம்மை ஆசீர்வதிப்பார்; ஆசீர்வாதமாக வைப்பார்.  

ஜெபம்: தேவனே, தபீத்தாளைப்போல நானும் உம்மை முழுமனதுடன் நேசிக்க, ஆதி அன்பை என்னுள்ளத்தில் புதுப்பியும். ஏழைகளையும் திக்கற்றவர்களையும் நான் நேசித்து அவர்களுக்கு என்னாலானமட்டும் உதவ என் கைகளை விரிவாகத் திறக்க உதவி செய்யும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page