செவ்வாய், செப்டம்பர் 23 || நன்றியுடன் கர்த்தரைத் துதியுங்கள்!
- Honey Drops for Every Soul

- Sep 23
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 100: 4,5
உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே.. விழுந்து.. ஸ்தோத்திரஞ்செலுத்தினான். - லூக்கா 17: 15,16
ஒவ்வொரு நாளும் கிருபையாகக் கர்த்தரால் நமக்குத் தரப்படுகிறது. அந்தந்த நாளிலும் நன்றியுடன் நாமிருக்க அநேக காரியங்கள் உண்டு. ஆனாலும் நாம் முறுமுறுத்து, குறைசொல்லி நாளைக் கடத்துகிறோம். ராபர்ட் ஸ்கல்லரின் தகப்பனோ நன்றியுள்ள ஒரு கிறிஸ்தவராக வாழ்ந்தவர். தன் தகப்பனது நன்றிசெலுத்தும் குணம் எப்படித் தங்களைக் காப்பாற்றியது என்று ராபர்ட் விளக்குகிறார். நான் சிறுவனாக இருந்தபோது ஒருமுறை எங்கள் மாநிலம் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நல்ல மழைவேண்டுமென்று நாங்கள் ஊக்கமாக ஜெபித்தும் மழை வரவேயில்லை. அறுவடைக் காலம் வந்தபோது, சாதாரணமாக 100 வண்டிகள் நிறைய அறுவடை செய்யும் தகப்பன், அந்த ஆண்டு வண்டியில் பாதி மட்டுமே பயிரை அறுவடை செய்தார். அதைக்கண்டு நாங்கள் அனைவரும் அழுதோம். ஆனால், என் தகப்பன் அழவில்லை. அன்று நாங்கள் உணவு உண்ண அமர்ந்தபோது, என் தகப்பன் காய்த்துப்போயிருந்த அவரது கரங்களால் எங்களது கரங்களைப் பற்றிக்கொண்டு, கண்களை மூடி வானத்தை நோக்கி, ஆண்டவரே, நான் ஒன்றையும் இழந்துபோகவில்லை. நான் விதைத்த விதைச் சோளத்தை மறுபடியும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள உதவினீர். உமக்கு நன்றி செலுத்துகிறேன் என்று ஜெபித்தார். அவரது நன்றிநிறைந்த இதயத்தை நான் கண்டு அன்று ஆச்சரியப்பட்டேன். மற்ற விவசாயிகள் புலம்பிய போதும் என் தகப்பன் சொன்னதை என்னால் மறக்கவே முடியவில்லை. நிலைமை மட்டும் வேறுவிதமாக இருந்திருந்தால் என்று நடக்காததைப் பேசி காலம் கழிப்பது நமக்கு தகாது. அது நம்மைத் தோல்விக்கு நேராக நடத்திவிடும் என்றார். அந்த வார்த்தை இன்றுவரை எதையும் சந்திக்க என்னைத் தயார்ப்படுத்தி வருகிறது. என் தகப்பனது நன்றியறிதலுள்ள குணம் பாதக சூழ்நிலைகளை மேற்கொண்டு கணிசமான சொத்தைச் சம்பாதிக்கவும் உதவிற்று என்கிறார் அவர்.
அன்பானவர்களே, தோல்விகளையே நோக்கிக்கொண்டு நாம் இராமல், நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக கர்த்தருக்கு நன்றி சொல்பவர்களாக வாழ்ந்தால் கர்த்தர் நமது சூழ்நிலைகளை மாற்றி வெற்றிக்கு நேராக நம்மை நடத்தப் போதுமானவராக இருப்பார். அவருக்கு நன்றி செலுத்துவோம். ஜெபம்: பிதாவே, நீர் என் மேய்ப்பர். நான் ஒருபோதும் தாழ்ச்சியடைவதில்லை. என்னை நீர் போஷிக்கிறீர். சூழ்நிலையை நான் பாராமல், நீர் என் தேவைகளை எந்நாளும் சந்திப்பீர் என நம்பி எப்போதும் நன்றி செலுத்தும் இதயத்துடனிருக்க எனக்குக் கிருபை தாரும். முறுமுறுப்பை என்னிலிருந்து அகற்றும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments