செவ்வாய், ஏப்ரல் 29 || ஆசை உங்களைக் கொல்ல ஒட்டாதிருங்கள்!
- Honey Drops for Every Soul

- Apr 29
- 1 min read
வாசிக்க: மத்தேயு 19: 16-22
பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; .. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது .. ஜீவன் அல்ல. - லூக்கா 12:15
இங்கே இயேசு பொருளாசையைக் குறித்து நம்மை எச்சரிக்கின்றார். இன்றைக்கு நம்மைச் சுற்றியுள்ள உலகம் பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்திருக்கிறது. நம் வாழ்க்கைக்கு சில அத்தியாவசியப் பொருட்கள் தேவைதான். அவற்றைப்பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு சிறிது பணத்தைச் சேமிப்பதற்கும், பேராசையுடன் செல்வத்தைக் குவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பொருளாசை ஒருபோதும் திருப்தி தருவதில்லை. இயேசு சேமிப்பது தவறு என்று கூறவில்லை. அவர் கூறுவதெல்லாம் இவ்வுலகத்திலே செல்வத்தைப் பெருக்கிக்கொண்டே போவதினால் ஒருவரும் பரிபூரண வாழ்வை அடைவதில்லை என்பதே! அப்படியானால் அந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள இயேசு கூறும் வழிதான் என்ன? இங்கல்ல, பரலோகத்தில் நமது பொக்கிஷங்களைச் சேர்த்துவைத்து தேவனிடத்தில் செல்வந்தராக இருப்பதே அந்த வழி!
அன்பானவர்களே, எப்படி நாம் கர்த்தரிடத்தில் செல்வந்தர்களாக இருக்கமுடியும்? முதலாவது, இங்கு அவர் கொடுத்துள்ள ஐசுவரியத்தை அவரது சித்தப்படி செலவிடவேண்டும். இரண்டாவது, ஏழை எளியவர்களுடைய தேவைகளைச் சந்திக்கவேண்டும்; தேவராஜ்யத்தின் வேலையைத் தாங்கவேண்டும். மூன்றாவதாக, உலக சம்பத்தின்மேல் கண்களை வைக்காமல் தேவனைப் பின்பற்றுவதையே நம் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நான்காவதாக, உலக இன்பங்களை அனுபவிப்பதைக்காட்டிலும் அவரோடுள்ள உறவை முக்கியப்படுத்தவேண்டும். ஐந்தாவதாக, நம் தொழில் அல்லது வேலையை முக்கியப்படுத்தி, வேதவாசிப்பையும் சபையின் காரியங்களில் உதவிகள் செய்வதையும் பின்னுக்குத் தள்ளிவிடாதிருக்கவேண்டும். இது நம் பேராசை அல்லது பொருளாசையை நாம் அழித்தால் மட்டுமே சாத்தியம். அப்படி வாழ அவரது மாபெரும் கிருபையை நாடுவோம்.
ஜெபம்: தேவனே, நீர் தந்த சம்பத்துக்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மிடத்தில் நான் செல்வந்தனாகும்படி, அவற்றை நான் பரலோகப் பொக்கிஷமாக மாற்றிக்கொள்ளும்படி உமது சித்தத்தை நிறைவேற்ற கிருபை தாரும். பொருளாசை ஒருபோதும் என்னை ஆட்கொள்ள ஒட்டாதிரும். ஆமென்தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments