top of page

செவ்வாய், ஆகஸ்ட் 26 || தாழ்மையும் கீழ்ப்படிதலும் எழுப்புதலைக் கொண்டுவரும்!

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Aug 26
  • 1 min read

வாசிக்க: எஸ்றா 9: 10-15


... தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்... இப்பொழுதும்... தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்... - எஸ்றா 10:2,3


எஸ்றா எருசலேமுக்கு வந்தபோது, ஆசாரியர் லேவியர் உட்பட இஸ்ரவேல் மக்களில் சிலர், புறஜாதியான ஸ்திரீகளை மணந்து கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல்போனதை அறிந்த அவன் முதலாவது ஆலயத்திற்குச் சென்று தன் வஸ்திரத்தையும் சால்வையையும் கிழித்து, தலைமயிரைப் பிடுங்கிக்கொண்டு, திகைத்தவனாய் சாயங்காலமட்டும் உட்கார்ந்திருந்தான். பின்பு முழங்காற்படியிட்டு கர்த்தருக்கு முன்பாகத் தன் கைகளை விரித்து, பாவஅறிக்கை செய்து ஜெபித்தான். அதுமட்டுமின்றி அவன் தானியேல் ஜெபித்ததுபோல, தன்னை மக்களோடு இணைத்துக்கொண்டு ஜெபித்தான். அப்போது, புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமாக அங்கு கூடிய திரள்கூட்டம் பாவ உணர்வடைந்து அழுது அறிக்கையிட்டனர். (எஸ்றா 10:1) அதோடு அந்த அந்நிய ஸ்திரீகளையும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிடும்படி உடன்படிக்கை செய்ய ஆலோசனை சொன்னான். மூன்று நாட்களுக்குள்ளாக கொட்டும் மழையில் மக்கள் அனைவரும் மறுபடியும் கூடிவந்தபோது, கலப்பு மணம் செய்துகொண்ட அனைவரும் அதனைத் தள்ளி தங்களைப் பரிசுத்தம் பண்ண எஸ்றா ஆணை பிறப்பித்து, அன்று தொடங்கி மூன்று மாதத்திற்குள்ளாக இந்தக் காரியம் செய்துமுடிக்கப்பட தலைவர்களிடம் கட்டளையும் இட்டான். இப்படித் தவறுசெய்தவர்களின் தொகை சற்றேறக்குறைய 1 சதவீதமே இருந்தாலும், அது கொஞ்சம் புளித்த மா மொத்த மாவையும் புளிப்பாக்குவதற்குச் சமமாக இருந்தபடியால், கர்த்தர் அவர்களை வெறுத்தார். பரிசுத்தராகிய அவரது கண்களில் சிறு பாவமும் பெரிதாகத் தோன்றுமல்லவா!


அன்பானவர்களே, எஸ்றாவின் தாழ்மையும் மக்களின் கீழ்ப்படிதலும் இஸ்ரவேலிலே ஒரு மாபெரும் எழுப்புதலைக் கொண்டுவந்தது. அக்கிரமம் முற்றிலுமாக அகற்றப்பட்டு, முழு சமுதாயமும் கர்த்தரண்டைக்குத் திரும்பி, அவரையே சேவிக்க மறுபடியுமாக உடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொண்டது.   

ஜெபம்: தேவனே, மக்களின் அக்கிரமத்தைக் கண்ட எஸ்றா, தன்னை உமக்கு முன்பாகத் தாழ்த்தி ஜெபித்ததன் விளைவாக மக்கள் மனந்திரும்பியதையும், ஒரு எழுப்புதல் உண்டானதையும் இன்று வாசித்தேன். என்னை நான் தாழ்த்தி எனது மக்களுக்காக ஜெபிக்க, எழுப்புதல் கொணரக் கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page