செவ்வாய், அக்டோபர் 14 || அவர் செவிடரைக் கேட்கப் பண்ணுகிறார்.
- Honey Drops for Every Soul
- 4 days ago
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: மாற்கு 7: 31-35
உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். -மாற்கு 7:35
ஒருநாள் இயேசு தெக்கப்போலி பகுதிக்கு சென்றபோது, மக்கள் அவரிடம் கொன்னை வாயுடைய ஒரு செவிடனைக் கொண்டுவந்தார்கள். உருக்கமான இரக்கத்தால் இயேசு அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துப்போய் அவன் காதுகளையும் நாவையும் தொட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார். திறக்கப்படுவாயாக என்று அவர் கொடுத்த சாதாரணமான கட்டளையினால் அந்த மனிதனின் செவிகள் திறக்கப்பட்டு அவன் நாவின் கட்டும் அவிழ்ந்தது. எவ்வளவு வல்லமை உள்ள நேரம் அது! இது சரீர சுகத்தைவிட மேலான அற்புதம் - ஏனெனில், கிறிஸ்து ஆவிக்குரிய ரீதியில் செய்வதைத் தெளிவாகக் படம்பிடித்துக் காட்டியது அது. பாவம் தேவனின் குரலைக் கேட்காதபடி நம்மைச் செவிடாக்குகிறது; மற்றும் அவரைப் போற்றாதபடிக்கு நம்முடைய நாவுகளைக் கட்டிவைக்கிறது; ஆனால் பாவம் கட்டிவைத்துள்ளதை கட்டவிழ்க்கும் வல்லமை இயேசுவுக்கு மட்டுமே உள்ளது.
அன்பானவர்களே, எவ்வளவு முறை நாம் உலகத்தின் சப்தங்களினால் திசைதிருப்பப்பட்டு, ஆண்டவர் வார்த்தையை கேட்கமுடியாமல் மந்தமாக இருக்கிறோம்! அல்லது அவரது சத்தியத்தை தைரியமாகப் பேச தயங்குகிறோம்! இந்த மனிதன் தன்னைத்தான் குணப்படுத்தமுடியாமல் இருந்ததுபோல நாமும் இருக்கிறோம். ஆனால், கிறிஸ்து நம்மைத் தொட்டவுடன், நம் ஆவிக்குரிய செவிகள் அவர் குரலைக் கேட்கும்படிக்குத் திறக்கப்படுகின்றன; அவர் துதியைச் சொல்ல நம் வாய்கள் திறக்கப்படுகின்றன. அப்போது நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டு நம் வாயிலிருந்து வரும் (சங்கீதம் 40:3). அந்த மனிதனை இயேசு தனியே அழைத்துச் சென்றார் என்பதை சற்று கவனிப்போம். தனிப்பட்ட விதத்தில் கரிசனை காட்டுகிறவர் அவர், வெறும் ஜனத்தின் கவனத்தை ஈர்ப்பது மட்டும் அவரது நோக்கம் அல்ல என்பதைக் காட்டுகிறது இது. அவர் நம் தனிப்பட்டத் தேவைகளை அறிந்து நம்மைத் தனிப்பட்ட விதத்தில் நடத்துகிறார். மற்றவர்கள் அறியக்கூடாத வகையில் நம்மிடம் பேசுகிறார். நமது எண்ணச் சிதறல்களை அமைதிப்படுத்தவும், அவர் வார்த்தையைக் கேட்கும்படி நம் செவிகளைத் திறக்கவும், அவரது நன்மைகளை எடுத்துரைக்க நம் நாவுகளின் கட்டுகளை அவிழ்க்கவும் தேவனுக்கு நாம் விட்டுக்கொடுப்போமாக.
ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, உம் குரலைத் தெளிவாக கேட்க என் செவிகளை திறப்பீராக. உம் துதியைச் சொல்ல என் நாவின் கட்டை அவிழ்ப்பீராக. உம் வார்த்தையைக் கவனமாகக் கேட்டு மற்றவர்களுடன் அதை தைரியமாகப் பகிர்ந்தளிக்க எனக்கு உதவி செய்வீராக. புதுப்பாட்டை என் வாயில் தந்து உம்மை எப்போதும் போற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177
Comments