top of page

செவ்வாய், அக்டோபர் 08 வாசிக்க: யோவான் 7: 37-39

  • Writer: Honey Drops for Every Soul
    Honey Drops for Every Soul
  • Oct 8, 2024
  • 2 min read

தாகமுள்ள ஆத்துமாவுக்கு பரிசுத்த ஆவி தேவனைக் கொணர்கிறார்


வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும். - யோவான 7:38


ree

பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற முக்கியக் காரியம், நமக்கு அவர் தேவனைக் கொண்டுவருகிறார். இயேசு உலகில் இருந்தபோது, அவரது நாமம் இம்மானுவேல் - தேவன் நம்மோடு இருக்கிறார் என்று இருந்தது. இன்று அவர் பரலோகம் சென்றபின், பரிசுத்த ஆவியானவர் உலகிற்கு இறங்கி வந்தபோது நமக்கு தேவனைக் கொண்டுவந்தார். ஒரு நபர் இயேசுவை விசுவாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் வறண்ட நிலத்தில் ஆறு ஓடுவது போல வந்து அந்த நபருக்குள் வாசம் செய்கிறார். தம் ஆசீர்வாதங்களை அவர் ஊற்றுகையில் நம் வாழ்வு மறுபடியும் துளிர்க்கத் தொடங்குகிறது. பரிசுத்த ஆவியாகிய ஆறு நமக்குள் ஓடும்போது, நம் தாகத்தைத் தணிக்கிறார்; நம்மிலிருக்கின்ற வெறுமையை அவர் ஜீவநதிகளால் நிரப்புகிறார். ஆனால் நாம் ஒன்றை மறக்கக்கூடாது - நாம் பதுக்கிவைக்கும்படிக்கு நம்மைத் தேவன் ஆசீர்வதிப்பதில்லை. பிறரோடு பகிர்ந்துகொள்ளும்படிக்கே அவர் ஆசீர்வாதங்களைத் தருகிறார். வேறுவிதமாகக் கூறினால், பிறருக்குத் தேவனை நாம் கொடுக்கும்படியே பரிசுத்த ஆவியானவர் தேவனை நம்மிடம் கொடுக்கிறார். கிறிஸ்துவை மெய்யாக விசுவாசிப்பவர் சுயசார்புடையவராயிருக்க மாட்டார். அவர் தனக்குள் சொல்லிக் கொள்வது, நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன், நான் பெற்ற ஆசீர்வாதங்களைப் பிறருக்குக் கொடுக்கவேண்டும். எனக்கென வைத்துக்கொள்வது கூடாது. தேவன் எனக்குக் கொடுத்தவற்றை, நானும் கொடுக்கவேண்டும். பணமாக இருந்தால் எவ்விதத்திலும் அது என்னுடையதல்ல. அது நேரமாக இருந்தால், அது தேவனுக்கே உரியது. அது உதவும் கரங்களாயிருந்தாலும், தேவன் இறங்கி வந்து எனக்கு உதவினதால் நானும் அவற்றை அப்படி உபயோகிப்பேன்.


அன்பானவர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்துள்ளாரா? அப்படியானால் மற்றவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள். கர்த்தர் உங்கள்மேல் தயுவுள்ளவராயிருக்கிறாரா? நீங்களும் பிறரிடத்தில் தயவு காட்டுங்கள். தமது கிருபையை உங்கள்மீது பொழிகிறாரா? நீங்கள் மற்றவர்களிடத்தில் கிருபை பொழியுங்கள். கர்த்தர் உங்களை மன்னித்திருக்கிறாரா? அப்படியானால் நீங்களும் மற்றவர்களை மன்னியுங்கள். சில தாகமுள்ள ஆத்துமாக்களுக்கு ஜீவநதிகளைக் கொண்டுசெல்லும் வாய்க்காலாக நீங்கள் இருங்கள்.

ஜெபம்:  ஆண்டவரே, தேவனை எனக்குக் கொணர்ந்த ஆவியானவருக்காக உமக்கு நன்றி. அவர் ஜீவத்தண்ணீருள்ள நதிகளை என்னில் புறப்படப்பண்ணி, தாகமுள்ள ஆத்துமாவைத் திருப்தியாக்குகிறார். என்னிலுள்ள ஆவியானவரால் ஆசீர்வாத வாய்க்காலாய் தாகமுள்ளவர்களுக்கு ஜீவதண்ணீரைக் கொண்டுசெல்வேன். ஆமென்.

அன்பானவர்களே


இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12  மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து,  இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம்.  நீங்கள் எந்த அரை மணி  நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.  நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான, 

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்



Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page