வெள்ளி, ஜூலை 25 || ஆண்டவர் நம் இருதயத்தைப் பார்க்கிறார்!
- Honey Drops for Every Soul

- Jul 25, 2025
- 1 min read
வாசிக்க: எசேக்கியேல் 18: 30-32
... இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
- யாக்கோபு 4:8
எரேமியா 17:9, எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே மகா திருக்குள்ளதும் கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார் என்று கூறுகிறது. ஆம். நமது இருதயம் பொல்லாப்பும் தீங்குமான நினைவுகளால் நிறைந்திருக்கிறது. அதை அறிந்தவர் ஆண்டவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. சங்கீதம் 44:21, இருதயங்களின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறார் என்று கூறுகிறது. எரேமியா 17:10 அவர் இருதயத்தை ஆராய்கிறவர், உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவர் என்று விளக்குகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 2:23ல், நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று சபைகள் அனைத்தும் அறிந்துகொள்ளும் என்று அவர் எச்சரிப்பதை நாம் வாசிக்கிறோம். இப்படி வசனங்களைத் தெளிவாக அறிந்திருக்கும் நாம், அவருக்கு முன்பாக நம் எண்ணங்களை சுத்திகரிக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. நம் இஷ்டப்படி வாழ்ந்துகொண்டு அவர் அதை அறியமாட்டார் என்று எண்ணுவது முட்டாள்தனம். அவருக்கு முன் அனைத்தும் நிர்வாணமாகவும் வெட்டவெளிச்சமாகவும் இருக்கிறதே! எனவே, நமது பழைய மனுஷனை நாம் களைந்து, உள்ளத்தில் புதிதான ஆவியுடையவர்களாக, பொய், கோபம், திருட்டு, கெட்ட வார்த்தை, கசப்பு, மூர்க்கம் தூஷணம் போன்ற எல்லா துர்க்குணத்தையும் விட்டுவிட்டு, புது ஜீவன் உள்ளவர்களாக வாழ்வோம். 2 கொரிந்தியர் 5:17ல், ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான் என்று கூறியிருப்பதற்கொப்ப வாழ்வோம்.
அன்பானவர்களே, கடைசி நாட்களில் நாம் வாழ்கிறோம். இயேசு எப்போதும் வரலாம். எனவே, நம் இருதயங்களைச் சுத்திகரித்துக்கொண்டு அவர் வரவை எதிர்பார்த்து காத்திருப்போம். ஜெபம்: தேவனே, என்னிஷ்டமாக வாழாமல், உமக்குப் பயந்து, நீர் என்னை, என் இருதயத்தை என் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர், உமக்கு மறைவானது ஒன்றும் இல்லை என்ற நினைவோடு பழைய மனுஷனைக் களைந்துபோட்டு புது சிருஷ்டியாய் ஜீவிக்க கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments