வெள்ளி, ஆகஸ்ட் 22|| நேசியுங்கள்! மன்னியுங்கள்! ஒன்றுபடுங்கள்!
- Honey Drops for Every Soul

- Aug 22, 2025
- 1 min read
வாசிக்க: ரோமர் 15: 4-7
... நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும்... - யோவான் 15:19
ஜெபக்குறைவு மட்டுமின்றி வேறு சில காரணங்களாலும் எழுப்புதல் தாமதமாகிறது. உலகம் இன்று சபைக்குள் புகுந்துவிட்டது இதற்கு ஒரு காரணம்.
இரண்டாவதாக, கிறிஸ்தவர்களிடையே அதிகரித்துவரும் அன்புத் தணிவும் எழுப்புதல் தாமதிக்க ஒரு காரணம். உலகம் முழுவதும் சென்று சபைப் பாகுபாடின்றி ஊழியம் செய்துவரும் ஒரு சுவிசேஷகர், இன்று கிறிஸ்தவ உலகில் எங்கும் பரவலாகக் காணப்படும் காரியம் ஒன்று உண்டென்றால் அது ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தாமல் வெறுப்பை வெளிப்படுத்துவதே என்று கூறுகிறார். இப்படிப்பட்ட பிரிவினைகள், பாகுபாடுகள் என்று மறைந்து இயேசுவின் அன்பு மேலோங்குகிறதோ, அன்றுதான் கிறிஸ்தவர்களுக்குள்ளே ஒற்றுமை மலரும்.
மூன்றாவதாக, மன்னிக்கும் தன்மை இல்லாமையால்தான் எழுப்புதல் தாமதிக்கிறது. வேல்ஸ் தேசத்திலிருந்த ஒரு சபையில் அந்தப் போதகரும் சபையாரும் ஊக்கமாக எழுப்புதலுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தனர். பல மாதங்கள் கடந்தன. ஒருநாள் ஜெபித்துக்கொண்டிருந்த வேளையில், கூட்டத்திலிருந்த ஒரு விசுவாசி எழுந்து நேராக இன்னொருவரிடம் சென்று, கண்களில் கண்ணீருடன், நண்பனே, என்னை மன்னித்துவிடு என்று கூற, மற்றவர் அவரைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார். இதைக் கண்ட மற்ற பலரும் எழுந்து தங்கள் பாவங்களை அறிக்கையிட்டதோடு மற்றவர்களோட ஒப்புரவாகினர். ஆவியானவர் வல்லமையாக கிரியை செய்தபடியால் அதன்பின் அந்த சபையில் ஒரு பெரும் எழுப்புதல் ஏற்பட்டது. அந்த எழுப்புதல் அலை அருகிலிருந்த மற்ற சபைகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
அன்பானவர்களே, நாம் உலகத்தாரைப்போல இருப்பது கூடாது. மேலும் ஒற்றுமையும் அன்பும் நம்மிடையே அதிகமாகக் காணப்படவேண்டும். இந்த மாறுதல் பிரசங்கங்களாலல்ல, ஆவியானவரின் வல்லமையான அசைவாடுதலால் மட்டுமே கூடும். எனவே, அவர் இடைபட நாம் ஊக்கமாக ஜெபித்தால் எழுப்புதல் காண்போம்.ஜெபம்: தேவனே, இன்று சபைமக்களாகிய எங்களுக்குள்ளும் உலகம் புகுந்துவிட்டது வருத்தம் தருகிறது. கிருபையான எங்களை மன்னியும். அன்புத்தணிவு, பிரிவினை போன்றவற்றை அகற்றி எங்களில் எழுப்புதல் தாரும். ஆவியானவர் எங்களில் வல்லமையாக இடைபடட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments