புதன், ஏப்ரல் 30 || நம்மைப் பயன்படுத்துமுன் அவர் பண்படுத்துகிறார்!
- Apr 30, 2025
- 1 min read
வாசிக்க: யாத்திராகமம் 3: 1-10
மோசே ... தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான்... - யாத்திராகமம் 3:1
நாற்பது வருடகாலம் மீதியான் தேசத்து வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த நாட்களில், மோசே பொறுமை, விடாமுயற்சி, மற்றும் கர்த்தரின் சித்தத்திற்கு முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். இந்த பயிற்சிதான் பிற்காலத்தில் முரட்டாட்டம் நிறைந்த இஸ்ரவேல் மக்களை நடத்தும் தலைவனாக அவரைப் பக்குவப்படுத்தியது. யோசேப்பு எகிப்தில் அனுபவித்த பதின்மூன்று வருட அடிமை வாழ்க்கை, பவுல் அரபு தேசத்தில் செலவிட்ட மூன்று வருடங்கள், (கலாத்தியர் 1:17,18) அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு அவர்களையும் மோசேயைப்போலவே தயார்ப்படுத்தியது. வாரன் வியர்ஸ்பி என்ற வேதவல்லுஞர், கர்த்தர் தன் கரங்களை திடீரென மக்களின் தலையில் வைத்து அவர்களைத் தலைவர்களாக்குவதில்லை; ஊழியத்துக்கென்று அவர்களை தயார்ப்படுத்த நேரமெடுக்கிறார் என்கிறார். சோம்பேறிகளையல்ல, சுறுசுறுப்பானவர்களையே கர்த்தர் தம் ஊழியத்திற்கு அழைக்கிறார். கோதுமையைப் போரடித்துக் கொண்டிருக்கும்போதுதான் கிதியோனை அழைத்தார். (நியாயாதிபதிகள் 6:11) ஆலயத்தில் பணிசெய்த நாட்களில்தான் சாமுவேலை அழைத்தார். (1 சாமுவேல் 3:10) ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோதுதான் தாவீதை அழைத்தார். (1 சாமுவேல் 16:11,12) நிலத்தை உழுகையில்தான் எலிசாவை அழைத்தார். (1 இராஜாக்கள் 19:19-21)
ஆண்டவர் இயேசுவும், சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரை, அவர்கள் தங்கள் வலைகளை மீன்பிடிப்பதற்கு தயார்செய்துகொண்டிருந்தபோதுதான் அழைத்தார். (மாற்கு 1: 16-20) மத்தேயுவை ஆயத்துறையில் வசூல் செய்துகொண்டிருந்தபோதுதான் அழைத்தார். (மத்தேயு 9:9) எனவே, அவரது சித்தத்திற்கு உங்களைக் கீழ்ப்படுத்தி அவர் நடத்தும் பாதையில் வரும் பாடங்களைக் கற்றுக்கொண்டு தலைவர்களாக உருவாகுமளவும் காத்திருந்து, உங்கள் வேலைகளில் உத்தமத்துடன் தீவிரமாக ஈடுபடுங்கள். சும்மாயிருக்காதீர்கள்!
ஜெபம்: தேவனே, தலைவர்களை நீர் தெரிந்துகொள்ளும் விதமும், அவர்களை உருவாக்கும் விதமும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மோசேயை உருவாக்க நீர் 40 ஆண்டுகள் எடுத்தீர். எனவே, என்னை நீர் உருவாக்க நேரமெடுப்பதை நான் உணர்ந்து உமக்குக் கீழ்ப்படிய கிருபை தாரும். ஆமென். தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com




Comments