புதன், ஆகஸ்ட் 27 || என்மீது உமது ஜீவ சுவாசத்தை ஊதும் தேவா!
- Honey Drops for Every Soul

- Aug 27, 2025
- 1 min read
வாசிக்க: எசேக்கியேல் 37: 1-14
... மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவ(ன்) ...
- ரோமர் 4:17
எசேக்கியேல் தீர்க்கதரிசி ஆவிக்குள்ளாகி, உலர்ந்த எலும்புகளால் நிறைந்த ஒரு பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோகப்பட்டதைக்குறித்து வாசிக்கிறோம். அவற்றின் அருகே அவனை சுற்றி நடக்கப்பண்ணின கர்த்தர் அவனை நோக்கி, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார். மனித அறிவின்படி இது நடக்கமுடியாத ஒரு காரியமல்லவா! ஆனால், எசேக்கியேல், கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்று பதிலுரைத்தான். கர்த்தர் அவனிடம், இந்த எலும்புகளைக்குறித்து தீர்க்கதரிசனம் உரை. கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல் என்றார். அவன் கர்த்தருடன் வாக்குவாதம் செய்யாமல், தனக்குக் கட்டளையிட்டபடியே தீர்க்கதரிசனம் உரைத்தான். (எசேக்கியேல் 37:7) இரைச்சலும் அசைவும் உண்டானது. கை எலும்புகள் ஒன்றாகவும் கால் எலும்புகள் ஒன்றாகவும், இப்படி எலும்புகள் தம்தம் எலும்புகளோடு சேர்ந்துகொண்டன. பள்ளத்தாக்கெங்கும் எலும்புக்கூடுகள். இப்போது, அவற்றின்மேல் நரம்புகளும் மாம்சமும் தோன்றின. தோலும் உண்டாகி மேற்புறத்தை மூடியது. அந்தக் காட்சி, ஒரு மாபெரும் சேனை அந்தப் பள்ளத்தாக்கில் படுத்துக்கிடப்பதைப்போல இருந்தது. ஆனாலும் அவைகளுக்குள் உயிர் இல்லாதிருந்தது. அப்போது ஆண்டவர் எசேக்கியேலிடம், நீ தீர்க்கதரினம் உரைத்து, ஆவியைப் பார்த்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவைகளின்மீது ஊது என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் எனக் கட்டளையிட்டார். மறுகேள்வி எழுப்பாமல் எசேக்கியேல் அப்படியே கர்த்தருடைய வார்த்தையை உரைத்தபோது, கர்த்தர் தம் ஆவியை அவர்களுக்குள் வைத்தபடியால் அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகாபெரிய சேனையாய் நின்றார்கள்.
அன்பானவர்களே, இன்றைக்கும் நம்மில் அநேகர் உயிரற்ற சடலங்களைப் போலத்தான் இருக்கிறோம். எதற்கும் உதவாதவர்களாக இருக்கிறோம். நாம் உயிர்ப்பிக்கப்பட்டால் ஒழிய பிரயோஜனம் ஒன்றுமில்லை. ஆவியானவரும் வேதவார்த்தையுமே நமக்குள் ஜீவனைக் கொண்டுவரமுடியும். நம்பிக்கையுடன் ஜெபித்து வேதவார்த்தையைப் பிரயோகிப்போம்; உயிரடைவோம். ஜெபம்: சர்வவல்லவரே, உமது ஆவியை எங்களுக்குள் வையும். எங்களை உயிர்ப்பியும். மாம்சத்திலோ அல்லது ஆவிக்குரிய விதத்திலோ மரித்துப்போன நிலையில் எங்களுக்குள் எது இருப்பினும் எங்களை உயிர்ப்பியும். உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. உமக்கே மகிமை உண்டாகட்டும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments