சனி, அக்டோபர் 04 || பாவங்களின் விலை சிலுவையில் முழுதும் செலுத்தப்பட்டது
- Oct 4, 2025
- 1 min read
தெளிதேன் துளிகள் வாசிக்க: யோவான் 19: 26-30
இயேசு ... முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். - யோவான் 19:30
சாத்தான் மீதும் பாவத்தின் மீதும் இயேசு சிலுவையிலே முழுமையாய் வெற்றிசிறந்தபோது, அவர் டெட்லஸ்டாய் என்ற வார்த்தையைச் சொன்னார். அந்நாட்களில் அனுதின வாழ்விலே டெட்லஸ்டாய் என்கின்ற வார்த்தையை அநேகர் பயன்படுத்தினர். ஒருவர் தன் கடனை முழுமையாகச் செலுத்தி முடித்தால், முழுமையாகச் செலுத்தப்பட்டது என்று எழுதி அவர் கையில் கொடுத்துவிடுவார்கள். ஒரு ரோமப் பிரஜை பாவம் செய்தால், அந்நாட்களில் இருந்த சட்டத்தின் பிரகாரம் அவரைச் சிறையில் அடைப்பார்கள், அவர் எதனால் சிறையில் வைக்கப்பட்டார் என்று விளக்கும் வண்ணமாக அவர் செய்த குற்றத்தை எல்லாம் எழுதி, அதிலே கடன் பற்றுக்கான சான்றிதழ் என்று குறிப்பிட்டு, அவரது சிறைச்சாலை அறையின் முன்பு அறைந்துவிடுவார்கள். கொடுக்கப்பட்ட தண்டனையை அவர் முழுவதும் நிறைவேற்றி முடிக்கும்வரை எல்லாரும் அறியத்தக்க விதத்தில் அந்த சான்றிதழ் அங்கே இருக்கும். அந்த நாட்களை அவர் முடித்தபின், சிறைச்சாலை அதிகாரிகள் கடன் பற்றுக்கான சான்றிதழின்மேல், அவர் தண்டனையை முடித்துவிட்டார் என சொல்லும்வண்ணம் டெட்லஸ்டாய் என்ற முத்திரையை இடுவார்கள். பிறகு, அந்த சான்றிதழை குற்றவாளியின் கையிலே கொடுத்துவிடுவார்கள்; கடனை முழுவதும் செலுத்திவிட்டேன் என்று சொல்ல அந்தச் சான்றிதழைக் காட்டுவார். அதற்குப் பிறகு அவர் மறுபடியும் அந்தக் கடனைச் செலுத்தத் தேவையில்லை; அதாவது, மறுபடியும் சிறைத் தண்டனை அனுபவிக்கத் தேவையில்லை!
அன்பானவர்களே, சிலுவையில் இயேசு சந்தித்த மரணம் உலகத்தோற்றத்துக்கு முன் தேவன் எழுதியிருந்ததை முடித்தது. அது முன்னமேயே முன்குறிக்கப்பட்டது; பிதாவின் மனதிலும், இருதயத்திலும் முன்குறிக்கப்பட்டிருந்தது. சிலுவையினால், பழைய ஏற்பாட்டின் சம்பிரதாயங்களும் சாங்கியங்களும் இந்த ஒரு நாளையும் நித்தியத்தையும் சுட்டிக்காட்டின; நம்பிக்கை அற்ற மனுக்குலத்துக்கான மீட்பின் விலைக்கிரயம் முழுமையாக செலுத்தப்பட்டது! நம் ஆண்டவர் செய்த இந்த மாபெரும் தியாகத்துக்காக நம் இருதயங்கள் நன்றியறிதலால் நிரம்பட்டும்.
ஜெபம்: ஆண்டவரே, வெள்ளியும் பொன்னும் எனக்கு மீட்பைக் கொடுக்கவில்லை. உலகின் செல்வங்கள் என் ஆத்துமாவை இரட்சிக்கமுடியாது. சிலுவையில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்தான் என் ஒரே அஸ்திபாரம். இரட்சகரின் மரணம் மட்டுமே என் பாவத்தைப் பரிகரிக்கும். சொல்லிமுடியாத இந்த விலையுயர்ந்த அன்புக்காக உமக்கு நன்றி ஆண்டவரே. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments