வெள்ளி, செப்டம்பர் 12 || நம் வழியெல்லாம் நம்மைக் காக்கிறார் கர்த்தர்
- Honey Drops for Every Soul

- Sep 12, 2025
- 1 min read
வாசிக்க: உபாகமம் 29: 2-6
... நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருக்கிற பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
- உபாகமம் 29:5
தேவனுடைய உண்மை எத்தனை ஆச்சரியமானது! 40 நீண்ட ஆண்டுகள் இஸ்ரவேலர் வறட்சியான, பாலைவனத்தில் அலைந்துதிரிந்தனர். ஆனாலும் அந்தப் பாலைநிலத்தில் அவர்கள் ஒன்றுக்கும் குறைவுபடவில்லை. அவர்கள் வஸ்திரங்கள் பழையதாய்ப் போகவில்லை. அவர்கள் பாதரட்சைகள் வலுவாக இருந்தன. அவர்களுடைய தேவைகள் நாளுக்கு நாள் சந்திக்கப்பட்டன. ஆனாலும், இஸ்ரவேலர் அடிக்கடி முரட்டாட்டம் செய்தனர். தேவனுடைய நற்குணத்தைச் சந்தேகித்தனர். அவருடைய திட்டங்களுக்கு எதிராக குறைகூறினர். விக்கிரகங்களுக்கு நேராக தங்கள் இருதயத்தைத் திருப்பினர். அவர்கள் முறுமுறுத்தபோதிலும், அவர்கள் வழிதப்பி நடந்தபோதிலும் ஆண்டவர் திரைமறைவிலே செயல்பட்டு அவர்களை நித்தமும் வழிநடத்தினார்.
அன்பானவர்களே, நாமும்கூட நமது வாழ்க்கையில் நிச்சயமற்று, சோர்ந்துபோய், நமக்கு முன்னிருக்கும் பாதை தெரியாமல் அலைந்துதிரிவதை உணரலாம். ஆனால் தேவனோ உண்மையுள்ளவர். அவர் நித்தமும் நம் தேவைகளைச் சந்தித்து, மறைவான தமது இரக்கத்தினால் நம்மைப் பாதுகாத்து, நம்மால் புரிந்துகொள்ளமுடியாத பாதைகளில் நம்மை வழிநடத்தி, தமது நற்குணத்தை ஒவ்வொரு காலத்திலும் நிரூபிக்கிறார். புலம்பல் 3:22 சொல்வதுபோல நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. கர்த்தர் நமது வனாந்தரத்தை மாற்றுவதில்லை; மாறாக அதனூடாக அவர் நம்முடன் நடந்து வருகிறார். நாம் நம் வாழ்க்கையை சற்று பின்னிட்டுத் திரும்பிப்பார்த்து நினைவுகூருவோம். நம் பெலன் குன்றிப்போனபோது எத்தனை முறை நம்மை சுமந்திருக்கிறார் அவர்? எல்லாமே சாத்தியமற்றபோது எத்தனைமுறை அவர் நமக்கு வழியை உண்டாக்கியிருக்கிறார்? அவர் தமது ஜனங்களை ஒருநாள் மட்டுமல்ல, வாழ்நாளெல்லாம் தாங்கும் தேவன். அவரைத் துதிப்பதற்கு நம் இருதயம் ஏவப்படுவதாக. அவரை நம்புவதால் நம் நடைகள் உறுதிப்படுவதாக.ஜெபம்: பரம தகப்பனே, நான் தடுமாறும்போதும் நீர் உண்மையுள்ளவராய் இருக்கிறீர். உமக்கு நன்றி. நான் நன்றியற்றவனாய், உண்மையற்றவனாக இல்லாமல் இருக்க கிருபை தாரும். என் அடிகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவாய் நடத்தி வந்தீர் என்பதை நினைத்து உம்மை நம்ப எனக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177




Comments